வியாழன், 3 அக்டோபர், 2013

கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு:மொத்தம் 17¾ லட்சம் வாக்காளர்கள்

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 17 லட்சத்து 72 ஆயிரத்து 990 வாக்காளர்கள் உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி, சிதம்பரம், நெய்வேலி, திட்டக்குடி(தனி), காட்டுமன்னார்கோவில்(தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் இம்மாதம் 31-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி நடைபெற உள்ளது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி பா.மனோகரன் நேற்று காலை 11 மணிக்கு வெளியிட்டார். வரைவு வாக்காளர் பட்டியலில் 17 லட்சத்து 72 ஆயிரத்து 990 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 8,97,485 பேரும், பெண்கள் 8,75,499 பேரும், 6 திருநங்கைகளும் இடம்பெற்று உள்ளனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி பா.மனோகரன் கூறியதாவது:-

வருகிற 1-1-2014-ந்தேதியை தகுதி நாளாகக்கொண்டு கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. எனவே 1-1-2014-ந்தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைய உள்ளவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முன்னரே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களது விவரங்களில் தவறுகள் இருந்தால் திருத்தம் செய்யவும், வாக்காளர்களின் பெயரை நீக்கவும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக இம்மாதம் 6, 20, 27 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் இன்றும்(புதன்கிழமை), வருகிற 5-ந்தேதியும்(சனிக்கிழமை) நடைபெற உள்ள சிறப்பு கிராமசபை கூட்டங்களிலும், நகர்புறங்களில் குடியிருப்போர் நலச்சங்கங்களில் நடைபெறும் சிறப்பு கூட்டங்களிலும் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் நகல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும், திருத்தங்கள் இருந்தால் சரி செய்யவும் உரிய படிவங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இது தவிர வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள், நகராட்சி ஆணையர், தாசில்தார், உதவி கலெக்டர், சப்-கலெக்டர் ஆகியோரது அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைக்கொடுக்கலாம்.

மேலும்www.elections.tn.gov.in & www.eci.nic.in என்ற இணைய தளம் மூலமாக ஆன்-லைனிலும் விண்ணப்பிக்கலாம். அதோடு பொதுமக்கள் வசதிக்காக கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் சேவை மையங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 39 இணையதளதேடல் மையங்களிலும்(பிரவுசிங் சென்டர்) வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்-லைனில் அளிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன் கூறினார்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது)மோகனச்சந்திரன், தாசில்தார் ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன்பிறகு அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் மற்றும் அனைத்து வாக்குச்சாவடிகளின் விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகள் அனைத்து கட்சிபிரதி நிதிகளுக்கு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக