ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

வேட்பாளரை நிராகரிக்க தனி பட்டன் சுப்ரீம் கோர்ட் உத்தரவு விரைவில் அமலாகும் தேர்தல் கமிஷன் அறிவிப்பு

புதுடெல்லி:வாக்காளர் விருப்பப்பட்டால் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனி  பட்டன் அமைக்கப்பட வேண்டுமென சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
சமீப காலமாக, தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கி வருகிறது. குற்றவழக்கில் 2 ஆண்டு சிறை  தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக பதவி விலக வேண்டும், அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என ஒரு தீர்ப்பு  வழங்கியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரிக்கும் உரிமை  வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற மற்றொரு அதிரடி தீர்ப்பை நேற்று வழங்கியது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்தில்  வேட்பாளர்களின் பெயர் பட்டியலுக்கு கீழேயும், வாக்குச்சீட்டிலும் ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்ற புதிய பிரிவை தேர்தல் கமிஷன்  சேர்க்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பிரிவில் வாக்களிக்கும் வாக்காளர் விவரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டுமென்றும்  தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இக்கட்சியின் அரசியல் உயர்மட்டக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி  கூறுகையில், ‘நமது ஜனநாயகத்தில் சுப்ரீம் கோர்ட்டோ அல்லது தேர்தல் கமிஷனோ மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதில்லை. அரசியல்  கட்சிகள் மட்டுமே மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல்  இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்’ என்றார்.

இதற்கிடையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை விரைவில் அமல்படுத்த இருப்பதாக தேர்தல் கமிஷன்  அறிவித்துள்ளது. இது தொடர்பாக கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்கள் பட்டியலுக்கு கீழே ‘யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை(என்ஓடிஏ)’ என்ற  பட்டன் சேர்க்கப்படும். யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் இந்த பட்டனை அழுத்தலாம். வாக்கு எண்ணிக்கையின் போது படிவம் 17சி  மற்றும் படிவம் 20 பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலும் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்குகளை தனியாக பதிவு செய்ய புதிய  வசதிகள் செய்யப்படும். இது போன்ற திட்டத்தை தேர்தல் கமிஷன் கடந்த 2001ம் ஆண்டே மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. டெல்லி, சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விரைவில் சட்டசபை  தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இயந்திரங்களில், ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்ற பட்டன் சேர்க்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக