ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

கடலூர்: திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.
நேற்று பிற்பகல் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
 
கடலூர் திருவந்திபுரம் அருகே உள்ள பில்லாலி தொட்டியைச்சேர்ந்த தாமோதரன் என்பவருடைய மகன் விஜய்(வயது17). இவர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வந்தார். இதே ஊரைச்சேர்ந்த ஆளவந்தார் மகன் ராமகிருஷ்ணன்(13) கூத்தப்பாக்கம் தனியார் பள்ளிக்கூடத்தில் 8–ம் வகுப்பு படித்து வந்தான்.
இவர்கள் இருவரும் நேற்று மதியம் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில், தடுப்பணை பகுதியில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இருவரும் சேற்றில் சிக்கிக்கொண்டனர். அவர்களால் சேற்றில் இருந்து மீண்டு வெளியே வரமுடியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
 
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3–30 மணி அளவில் திருவந்திபுரம் அணைக்கட்டு வழியாக நடந்து சென்றவர்கள் ஆற்றுக்குள் விஜயின் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆற்றில் குதித்து விஜயின் பிணத்தை மீட்டனர். அப்போது ராமகிருஷ்ணனின் உடலும் மிதந்தது. அவரது உடலையும் மீட்டனர்.
ஆற்றில் குளிக்கச்சென்ற மாணவர்கள், மூழ்கி பலியானது பற்றி ஊருக்குள் தெரியவந்ததும் உடனடியாக மாணவர்களின் பெற்றோரும், பில்லாலி தொட்டி கிராம மக்களும் சம்பவ இடத்துக்கு பதறியடித்து ஓடி வந்தனர். அங்கு அணைக்கட்டில் பிணமாக கிடத்தப்பட்டு இருந்த இருவரின் உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவம் இடத்துக்கு வந்தனர். பலியான இரு மாணவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
 
இரு மாணவர்கள் மூழ்கி பலியான இதே கெடிலம் ஆற்றில் கடந்த வாரம் சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டம் அகரத்தைச்சேர்ந்த பூ வியாபாரி முருகன் என்பவர், புதை மணலில் சிக்கி பலியானார். அந்த சம்பவம் நடந்த 8–வது நாளில், இரு மாணவர்கள் மூழ்கி பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக