திங்கள், 16 செப்டம்பர், 2013

மீண்டும் வகுப்புவாத விஷப் பாம்புகள்!

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாஃபர் நகரில் கடந்த சில  தினங்களாக நடந்து  வரும் கலவரத்தில் இதுவரை 200 பேர் வரை பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பலரை காணவில்லை. பலருடைய வாழ்வாதாரங்கள் முற்றிலும் இழக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் உயிரை காப்பாற்ற தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி தப்பிய பலருடைய நிலைமை என்னாயிற்று என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது நகர பகுதிகளில் துணை ராணுவப் படை மற்றும் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் கலவரம் ஓய்ந்து ஓரளவு அமைதியான நிலைமை நிலவினாலும், கிராமப் பகுதிகளில் கலவரம் பரவுவதாக செய்திகள் கூறுகின்றன. கலவரம் முற்றிலும் ஓய்ந்து முழுமையான விசாரணை நடந்த பிறகே அங்கு எவ்வளவு பயங்கரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறித்தும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டமான முஸாஃபர் நகரின் கிராமவாசிகள் சந்தித்த கோரமான அனுபவங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகும். ஆனால், தற்போது உறுதியாக ஒன்றை கூற முடியும். முற்றிலும் அரசியல் நோக்கத்துடன் ஒரு சமூகத்தின் மீது ஒருதலைபட்சமாக நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதலே முஸாஃபர் நகர் மாவட்டத்தில் நடந்து வருகிறது. கடந்த மாத இறுதியில் நிகழ்ந்த சில தகராறுகளும், அதனைத் தொடர்ந்து 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் கழிந்த தினங்களில் பெரியதொரு கலவரத்திற்கு வழி கோலியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதிலும், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும் உ.பி.யில் ஆளும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு தோல்வியடைந்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கலவரம் பரவியதும், அப்பாவிகள் பலருடைய உயிரிழப்பிற்கும் காரணம் அரசின் கையாலாகத்தனமே. வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஒருதலைபட்சமான தீர்மானத்துடன் காப் பஞ்சாயத்து கூடியதோடு, வகுப்புவாதத்தை கிளறிவிடும் போலியான சி.டி. வேகமாக பரப்புரை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், இதனை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டது. பாகிஸ்தானில் எப்பொழுதோ நிகழ்ந்த ஒரு சம்பவத்தை முஸாஃபர் நகரில் நிகழ்ந்ததாக சித்தரிக்கும் போலியான வீடியோவின் சி.டி.க்களை வேகமாக பரப்புரை செய்து, வகுப்பு வெறியை கிளறிவிட்ட ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் மீது ஏன் கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது குறித்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவும், சமாஜ்வாதிக் கட்சியின் உயர் தலைவர் முலாயம் சிங் யாதவும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர். சிறுபான்மை முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூட உ.பி. அரசுக்கு இயலவில்லை என்றால் மதச்சார்பின்மை குறித்தும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் குறித்தும் வாய் கிழிய பேசுவதில் எவ்வித பலனும் இல்லை. முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை சமாஜ்வாதிக் கட்சி வரும் மக்களவை தேர்தலில் இழக்க நேரிடும் என்பதற்கான எச்சரிக்கை மணி ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஹிந்துத்துவா அரசியலின் முக்கிய ஆயுதமே முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சார நெட்வர்க் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக எவ்வித அருவருப்பான செயல்களையும் ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை சுதந்திர இந்தியாவில் முன்னர் நிகழ்ந்துள்ள சம்பவங்களே சாட்சியாகும். முஸாஃபர் நகர் கலவரத்திலும் இது தொடருகிறது. வகுப்புவாதத்தின் பெயரால் சமூகங்களிடையே மோதலை உருவாக்கும் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளை கட்டுப்படுத்தாவிட்டால் வரும் நாட்களில் இந்த தேசம் பீதியுடன் கடந்து செல்லும் சூழல் உருவாகும். மிதவாத ஹிந்துத்துவா போக்கை கைவிட்டு மத்திய, மாநில அரசுகள் இரும்புக் கரங்கொண்டு ஹிந்துத்துவா பாசிச சக்திகளை அடக்க முன்வரவேண்டும்.

அ. செய்யது அலீ -
source:thoothuonline.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக