டெல்லி:உத்தரபிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் நடந்த வகுப்பு கலவரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், முசாபர் நகர் கலவரங்களுக்கு பாரதிய ஜனதாவும் சங் பரிவாருமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
முஸாஃபர் நகர் மற்றும் அருகேயுள்ள மாவட்டங்களில் கலவரம் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
கலவரத்தை தூண்டியதாக நான்கு பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸாஃபர் நகர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதனிடையே, முசாபர் நகர் கலவரம் தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொலைபேசியில் பேசினார்.
கலவரத்தை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்தால் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்த கலவரம் சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறியுள்ள அகிலேஷ் யாதவ், கலவரத்தை அடக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரம் நடைபெற்ற இடங்களை பார்வையிட சென்ற பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் தலைவர் அஜித்சிங் ஆகியோர் மாநில எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
கலவரம் நடைபெற்ற முசாபர் நகருக்கு செல்ல முயன்ற ரவிசங்கர் பிரசாத் காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரபிரதேச மாநில அரசு முற்றிலும் செயல் இழந்து விட்டதாகவும், அங்கு அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கில்தான் தாம் முசாபர் நகர் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே போன்று முசாபர் நகர் சென்ற ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் தலைவர் அஜித்சிங்கும் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், முசாபர் நகர் கலவரங்களுக்கு பாரதிய ஜனதாவும் சங் பரிவாருமே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக