சனி, 21 செப்டம்பர், 2013

திருச்சியில் பரபரப்பு- 124 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியது!

திருச்சி:திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் இறக்கையில் பறவை மோதியது. இதனால் விமானம் தரையிறக்கப்பட்டது.
 
மலேசியா       தலைநகர்
கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் திருச்சிக்கு தினமும் காலை, மதியம், மாலை 3 முறை வந்து செல்கிறது. நேற்று மாலை 3.30 மணிக்கு ஏர்ஏசியா விமானம் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்தது. பின்னர் திருச்சியில் இருந்து மாலை 4.30 மணியளவில் 124 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், ரன்வேயில் சென்று பின்னர் மேலே எழும்பியது. விமானம் மேலே எழுந்து சென்ற போது அப்பகுதியில் வட்டமடித்து கொண்டிருந்த பறவை விமானத்தின் இறக்கை பகுதியில் மோதியது. இதை சரியான நேரத்தில் கவனித்த விட்ட விமானி, தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாது என உணர்ந்தார். இது குறித்து திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை தரையிறக்க உத்தரவு வழங்கப்பட்டது.
ஆனாலும் விமானத்தில் எரிபொருள் அதிக அளவு இருந்ததால், இறங்கும் போது அசம்பாவிதம் நிகழ்ந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு விடும். எனவே எரிபொருளை குறைப்பதற்காக உடனே விமானத்தை தரையிறக்காமல் வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது. இதற்கான காரணமும் விமான நிலைய கட்டுபாட்டிற்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகள் ஓடுபாதையில் தயாராக நின்றது. இந்த தகவல் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
விமானம் 1.20 மணி நேரம் வட்டமடித்து எரி பொருளை ஓரளவுக்கு குறைத்த பின்னர் மாலை 5.50 மணிக்கு தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும், கீழே இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் விமானத்தின் இறக்கை பகுதியை சோதனை செய்தனர். பறவை மோதியதால் எவ்வித கோளாறும் ஏற்படவில்லை என தெரியவந்தது. இதன்பின்னர் விமானத்தை இயக்கலாம் என வல்லுநர்கள் கூறியதையடுத்து மீண்டும் விமானம் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
 
 விமானத்தின் இன்ஜின் பகுதியில் பறவை மோதினால் விமானம் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. இறக்கை பகுதியில் மோதினாலும் ஒரு சில நேரங்களில் ஆபத்து நேரிடும். இதனால் விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இறைச்சி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்படும். ஆனால் திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் இறைச்சி கடைகள் உள்ளது. விமான நிலையத்தின் அருகிலேயே இறைச்சி கழிவுகள் கொடப்படுவதால் இவற்றை உண்பதற்காக பறவைகள் அதிகளவில் சுற்றி திரியும். இதற்கு விமான நிலைய அதிகாரிகள் மாநகராட்சி மற்றும் போலீஸ் துணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் திருச்சி விமானநிலைய அதிகாரிகள் இவ்விஷயத்தில் மெத்தனம் காட்டுகின்றனர் என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். விமானத்தின் இறக்கை பகுதியில் பறவைகள் மோதி பாதிப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவில் திருச்சி விமான நிலையம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக