கடலூர் :முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை காசுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் டீக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் சில்லறை பிரச்னை பூதாகரமாக உருவெடுத்து உள்ளது.
இந்தியாவில் செக்யூரிட்டி பிரின்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலம் 50 பைசா, ரூ.1, 2, 5 நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு, வங்கிகள் மூலம் சில்லறை நாணயங்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன.
தற்போது, கடலூர் மாவட்டம், மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளில் சில்லறை தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வணிக நிறுவனம், பஸ் உள்ளிட்டவைகளில் பொது மக்கள் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை பெருவதில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுவதை காணமுடிகிறது.
ரூ.5 கமிஷன்: சில்லறை நாணயங்கள் இல்லாமல் வியாபாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், சில்லறை நாணயங்கள் கமிஷன் கொடுத்து பெறும் நிலை உருவாகியுள்ளது.
கடலூர் ,பண்ருட்டி மற்றும் பல பகுதிகளில் 100-க்கு ரூ.5 கழிவாக கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கே கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கூறினர்.
வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் :சில்லறை கேட்டு செல்லும் வணிகர்களிடம் வங்கி அதிகாரிகள், அலட்சியமாகவும், கிண்டலாகவும் பேசுவதாக வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலை நீடித்தால் வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கடலூர் மாவட்டத் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "வணிக நகரமான பண்ருட்டியில் ரூ.1, ரூ.2 நாணயங்கள் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது.
சில்லறை வணிகர்கள் வங்கியில் சென்று கேட்டால் இல்லை என கூறுகின்றனர். ஆனால், மொத்த வியாபாரிகளை வங்கி அதிகாரிகளே அழைத்து கொடுப்பதாக தெரிய வருகிறது. மேலும் இவ்வாறு பெறப்படும் சில்லறை நாணயங்கள் வேறு மாவட்டத்துக்கு அனுப்பப்படுவதாக தெரிய வருகிறது. இது தவறான முறையாகும்' என டி.சண்முகம் தெரிவித்துள்ளார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக