வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

வீராணம் ஏரி நீரில் முன்னுரிமைக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

சிதம்பரம்:வீராணம் ஏரி நீரினைப் பயன்படுத்துவதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பாசனப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.
விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.மாதவன், மாவட்டச் செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அவர் பேசியது:
புதிய வீராணம் திட்டம் தொடங்கப்பட்ட போது, ஏரி நீர் சென்னையின் குடிநீர் தேவைக்கு எடுத்துச் செல்வதால் பாசனத்தில் பாதிப்பு ஏற்படாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஆனால் கடந்த ஆண்டு வீராணம் ஏரி நிரம்பிய போது, பாசனத்திற்கு நீர் திறக்கப்படாததால் கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி நீரின்றி அழிந்தது.
இதையடுத்து நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பின்னரே ஏரி நீர் திறந்து விடப்பட்டது.
எனவே வீராணம் ஏரி நீரினைப் பயன்படுத்துவதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் அவர்.
மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக