சிதம்பரம்:மேட்டூரிலிருந்து கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் வேளையில் காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளும், வடிகால் பகுதிகளுமான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் ஆறுகள் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததாலும், ஆகாயத் தாமரைச் செடிகள் படர்ந்துள்ளதாலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகம் தமிழகத்துக்கு தர வேண்டியை நீரை தராததாலும் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.
மேலும் கடந்த மூன்று மாதகாலமாக ஏரி, குளங்கள், ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் வறண்டு போயின. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு போனது.
இதனால் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வீராணம் ஏரியின் மேல்கரையை தூர்வார தமிழக அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் கடந்த நான்கு மாதகாலமாக வீராணம் ஏரி வறண்டு இருந்தும் தூர்வாரும் பணி தொடங்கப்படவில்லை.
மேலும் வறண்டு போன ஆறுகள், வாய்க்கால்களும் தூர்வாரப்படவில்லை.
மேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரி நீரை 1 லட்சம் கனஅடி கொள்ளிடத்தில் வெளியேற்றப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கேரளத்திலும், கர்நாடகத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேலும் கூடுதலாக நீர் வருவதற்காக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
கூடுதலாக வரும் உபரி நீர் மேட்டூரிலிருந்து கொள்ளிடத்தின் வழியாக வெளியேற்றப்படும். அப்படி கூடுதலாக நீர் வெளியேற்றும்போது சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் சென்று கலக்கும்.
அப்போது சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கொள்ளிடக்கரையோர கிராமங்களில் இந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கடலில் கலந்து வீணாகும் நீரைத் தேக்கி வைக்க தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி.
குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் அனைத்து ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைச் செடிகள் படர்ந்தும், தூர்ந்தும் போய் உள்ளது. குறிப்பாக சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள வடிகால் வாய்க்கால்கள் ஆகாயத்தாமரை மற்றும் குப்பை கூளங்களால் முற்றிலும் தூர்ந்து போய் உள்ளதால், தற்போது கல்லணையிலிருந்து கீழணைக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம்ஏரிக்கு நீர் கொண்டு வரப்பட்டு ஏரியை நிரப்பி இந்த வாரத்தின் இறுதியில் சென்னைக்கு மீண்டும் குடிநீர் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் கூடுதலாக உபரிநீர் வரும்போது நீர் வடியாமல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் 2005-ஆம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்தது போல், இந்த ஆண்டு சுற்றுப்புற கிராமங்களில் வெள்ளநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்
வெள்ள அபாயத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோர கிராமங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடக் கரையின் இடதுகரையிலிருந்து காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அணைக்கரை வரை அதிகாரிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது 5 படகுகள் தயார் நிலையில் வைத்திருக்கவும், புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கவும், மருத்துவக் குழுக்கள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கிராமப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அரிசி மற்றும் பொருள்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு குடிமைப் பொருள் வழங்குதுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, காட்டுமன்னார்கோவில் அருகே ஓமாம்புலியூர் எனுமிடத்தில் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் 12 குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வந்தனர்.
அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், அவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் கொடுத்து பட்டா வழங்குமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆட்சியர் ஆய்வின்போது, சிதம்பரம் உதவி ஆட்சியர் (பொறுப்பு) பாதாளம், வட்டாட்சியர்கள் எம்.விஜயா (சிதம்பரம்), வெங்கடாசலம் (காட்டுமன்னார்கோவில்) மற்றும் பொதுப்பணித் துறையினர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக