ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கடலூர் மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிக்காக ரூ.84 கோடி ஒதுக்கீடு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் பெருகி வரும் போக்குவரத்தினால், அதிகரித்து வரும் விபத்தினைத் தவிர்க்கவும், சாலைகளின் தரத்தை உயர்த்தவும் தமிழக அரசு 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 340 கி.மீ., மாநில நெடுஞ்சாலை 1,816 கி.மீ., பிற சாலைகள் 5,511 கி.மீ., என மொத்தம் 7,667 கி.மீ., தூர சாலைகள் உள்ளன.
மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலைகளின் வாகன போக்குவரத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யாததன் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம், மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள மாவட்ட, கரும்பு அபிவிருத்தி மற்றும் பிற சாலைகள் பெரும்பாலும் குறுகலாக உள்ளதால், எதிரில் வாகனங்கள் வந்தால் வழிவிட ஒதுங்க முடியாமலும், பல சாலைகள் வளைவுகள் அதிகம் நிறைந்துள்ளதாலும் விபத்துகள் அதிகரித்து வந்தன.
மாவட்டத்தில் கடந்த 2008ம் ஆண்டில் 450 பேரும், 2009ல் 483 பேரும், 2010ம் ஆண்டில் 466 பேரும், 2011ல் 523 பேரும், கடந்தாண்டு 548 பேர் விபத்துகளில் இறந்துள்ளனர்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் குறுகிய சாலை காரணமாக விபத்துகள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான குறுகலான சாலைகளை அகலப்படுத்தி, இருவழிச் சாலைகளாக மாற்றவும், சாலை அரிப்பு ஏற்படும் பகுதிகளில் சாலையின் தரத்தை மேம்படுத்திட 2,792.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் 24ம் தேதி அரசு உத்தரவிட்டது.
அதில், கடலூர் மாவட்டத்தில் 84.75 கி.மீ., சாலையை விரிவாக்கம் செய்யவும், 173 கி.மீ, சாலையை பலப்படுத்தவும், நான்கு சிறு பாலங்கள் கட்டுவதற்காக மொத்தம் 83.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியில் மாநில நெடுஞ்சாலையில் கடலூர் - திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலையை பலப்படுத்த 71 லட்சமும், மாவட்டத்தின் பிரதான சாலைகளான திட்டக்குடி - சிறுபாக்கம்; வேப்பூர் - இறையூர்; காடாம்புலியூர் - உளுந்தூர்பேட்டை; விருத்தாசலம் - காட்டுக்கூடலூர், சிதம்பரம் - வீராணம்; விருத்தாசலம் - மேமாத்தூர்; திட்டக்குடி - தாழநல்லூர் - விருத்தாசலம் குட்ஷெட்; வல்லம்படுகை ரயில்வே சாலை, குறிஞ்சிப்பாடி - பாலூர்; குள்ளஞ்சாவடி - காட்டுக்கூடலூர் சாலைகளை அகலப்படுத்த 39.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை; விருத்தாசலம் - முதனை; வீராணம் ஏரிக்கரை சாலை, புத்தூர் சாலைகளை பலப்படுத்த 8.33 கோடி ரூபாயும், இரண்டு சிறு பாலங்கள் கட்ட 72 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற சாலைகளான சிதம்பரம் - உசுப்பூர்; கடலூர் - பள்ளிநேலியனூர் சாலைகளை விரிவுபடுத்த 1.31 கோடி ரூபாயும், ஈ.கீரனூர் - புதுக்குளம், சிறகிழந்தநல்லூர், சர்வராஜன்பேட்டை, மாளிகைமேடு, சொரத்தூர், சேத்தியாத்தோப்பு - கம்மாபுரம், நாட்டார்மங்கலம் - குடிகாடு; மன்னார்குடி - ஓமாம்புலியூர்; ஒரத்தூர் - டி.நெடுஞ்சேரி; சிதம்
பரம் - டி.எஸ்.பேட்டை; வேகாக்கொல்லை சாலையை பலப்படுத்த 19.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள் ளனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக