
விவசாயத்தின் உப தொழிலான கோழி வளர்ப்பு தொழிலை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கோழி வளர்ப்புக்கு கடந்த 20 ஆண்டு களாக 1 கிலோவுக்கு வளர்ப்பு கூலியாக ரூ.2 முதல் ரூ.3 வரை கோழி குஞ்சு நிறுவனங்கள் கொடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பல்வேறு சிரமங்களுக்கு இடையே கோழி வளர்த்து விற்பனைக்கு அனுப்பும் விவசாயிகளுக்கு கூலி உயர்வு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கோழி வளர்ப்புக்கு கூலி உயர்வு கோரி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் கடந்த 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடலூர் மாவட்ட கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிவமணி, கமலகிருஷ்ணன் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் சுமார் 500 கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். கோழி வளர்ப்பு கூலி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். போராட்டத்தின் காரணமாக கோழிகளை விற்பனைக்காக ஏற்றமாட்டோம். கோழி குஞ்சுகளை பண்ணைகளுக்குள் இறக்க மாட்டோம்.
கோழி இறைச்சி விலை ரூ.180 முதல் ரூ.240 வரை விற்கும் காலகட்டத்தில் விவசாயிகளுக்கு வளர்ப்பு கூலியாக ரூ.3 மட்டுமே வழங்கப்படுவது மாற்றியமைக்க வேண்டும். சராசரியாக மாவட்டத்தில் தினமும் 50 டன் அளவுக்கு கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வேலை நிறுத்தம் காரணமாக இது தடைபட்டுள்ளது.
எனவே, கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக