திங்கள், 26 ஆகஸ்ட், 2013

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு மாவட்டத்தில் 53,822 பேர் பங்கேற்பு

கடலூர் :தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 53,822 பேர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 61,305 பேர் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 53,822 பேர் மட்டுமே பங்கேற்றனர். 7,483 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கும் பொருட்டு கடலூர் மாவட்டத்தில் 19 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
124 விடியோ கேமிராக்கள் மற்றும் 4 தேர்வுக் கூடங்களில் வெப்கேமிராக்கள் அமைக்கப்பட்டு தேர்வுக் கூடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டன.
அனைத்துத் தேர்வுக் கூடங்களிலும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. தேர்வர்கள் எளிதில் தேர்வுக் கூடங்களை சென்றடையும் வகையில் கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சிதம்பரத்தில்...
சிதம்பரம், ஆக. 25: சிதம்பரத்தில் 28 மையங்களில் 9058 பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.
சிதம்பரம் பகுதியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம், சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி, ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி, ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி, அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நிர்மலா மெட்ரிக் பள்ளி, காமராஜ் மெட்ரிக் பள்ளி, வீனஸ் மெட்ரிக் பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 28 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
28 மையங்களில் 10221 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 1163 பேர் தேர்வுக்கு வரவில்லை. 9058 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
தேர்வு மையங்களை சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா, கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக