சனி, 24 ஆகஸ்ட், 2013

சிதம்பரத்தில் ரூ. 1½ லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரி பெண் அதிகாரி கைது

சிதம்பரம்:ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கடலூர் கடற்கரை சாலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 44). இவர் சிதம்பரத்தில் உள்ள வணிக வரி துறை அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு மாவட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார்.
சிதம்பரம் தேரடி தெருவில் உள்ள சிமெண்டு மற்றும் நிலக்கரி சாம்பல் மூலம் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஸ் கடந்த 2012–13–ம் ஆண்டிற்கான கணக்குகளை வணிக வரிதுறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க மாவட்ட அலுவலரான ராஜேஸ்வரியிடம் சென்றார்.
அப்போது சதீசிடம், நிறுவனத்தின் கணக்குகளை குறைவாக காட்டி வரியை குறைக்க வேண்டுமென்றால் ரூ.8 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ராஜேஸ்வரி கேட்டார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத சதீஸ், இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் ராஜேஸ்வரியை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.1½ லட்சம் பணத்தை சதீஷ் எடுத்துக் கொண்டு ராஜேஸ்வரியிடம் கொடுப்பதற்காக அவரை தொடர்பு கொண்டார்.
சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள ஒரு வங்கி முன்பு ராஜேஸ்வரியிடம் லஞ்சப்பணத்தை சதீஸ் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜேஸ்வரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக