மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியமோ... அதேபோல் குடிநீரும் முக்கியமானதுதான். பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப தற்போது குடிநீரின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 31 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நகரங்களில் குடிநீர் தலையாயப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்காக மக்கள் சாலையில் இறங்கி போராடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு
விநியோகம் செய்வதற்குத் தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில்லை.
இதற்கு முக்கியக் காரணம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுதான். ஆற்றில் எத்தனை ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும், தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை.
இதுமட்டுமின்றி, வீட்டுக்குவீடு ஆழ்குழாய் அமைத்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர். பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களின் தேவைக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்கள்தான்.
இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கூட்டுக் குடிநீர்த் திட்டம், வார்டுகள் தோறும் ஆழ்குழாய் கிணறு அமைப்பது போன்ற திட்டங்களை ஆட்சியாளர்கள் அறிவித்து, செயல்பாட்டுக்கு கொண்டு வந்தாலும், மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க முடியாது.
இதற்காக, மக்களிடையே சில வழிமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய (கூடுதல்) விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது தீவிரப்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும். சாதாரண வீடு முதல் அடுக்கு மாடி குடியிருப்புகள் வரை கட்டும்போது அங்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவதை உறுதி செய்யவேண்டும்.
மழைநீர் சேகரிப்பு அமைப்பை பயன்படுத்துவோருக்கு, குடிநீர்க் கட்டணத்தில் சலுகை அளித்து ஊக்கப்படுத்தலாம்.
மேலும், ஆறு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மணல் எடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.
கோடையில் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்களைச் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். சொட்டுநீர் பாசனம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
கிராமங்கள் தோறும் மரங்கள் நிறைந்த சோலைகளை அமைக்க முன்வர வேண்டும். கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீர்த் தவிர, பிற பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
நம் முன்னோர் காலங்களில் வீதிகள்தோறும் மரங்கள் நிறைந்து காணப்பட்டன. இதனால் பருவ காலங்களில் தேவையான அளவைவிட, அதிகமாகவே மழை பெய்துவந்தது. இந்த மழை நீரைச் சேமித்து அதன்மூலம் விவசாயத்தையும், குடிநீர்ப் பிரச்னையையும் போக்கி வந்தனர்.
இதற்காக அவர்கள் ஏரி, குளம் கண்மாய் போன்றவற்றையும் உருவாக்கி, தண்ணீரைச் சேமித்து வந்தனர். ஆனால், சமீபகாலமாக, ஏரி, குளம், கண்மாய் போன்றவைகளெல்லாம் காணாமல் போய் குடியிருப்புகளாய் மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஊற்று தோண்டினாலும் தண்ணீர் வருவது அரிதாகவே உள்ளது.
மழைக் காலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக மழைப் பொழிகிறது. இது மாநிலத்துக்கு மாநிலம் சற்று குறைவாகவும், கூடுதலாகவும் வாய்ப்பு உள்ளது.
இருந்தாலும், முக்கியமாக தமிழகத்தில் மழைநீரைச் சேமிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தத் தவறி விட்டனர் என்றே கூறலாம். இதனால் 50 சதவீதம் மழை நீர் வீணாகக் கடலில் போய் கலப்பதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே போகிறது.
குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க ஆட்சியாளர்கள் தொலை நோக்குப் பார்வையுடன், காணாமல் போன பழைய நீராதாரங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்டு, தண்ணீர் சேமிப்புக்கு வழிவகை செய்தால்தான் தண்ணீருக்காக எந்த ஒரு மாநிலத்திடமும் கையேந்தி நிற்கவேண்டிய நிலை வராது.
நீரின் இன்றியமையாமையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் குடிநீர்த் தட்டுப்பாட்டிலிருந்து விடுபடலாம்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக