புதன், 31 ஜூலை, 2013

மீண்டும் அரசு மருத்துவமனைக்கு பஸ் இயக்க கோரிக்கை, போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள்...பாதிப்பு!

பரங்கிப்பேட்டை:சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் அரசு டவுன் பஸ்கள், கடந்த ஆறு மாதமாக பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்துடன் திரும்பி சென்றுவிடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை வரை 5க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களான பு.முட்லூர், அகரம், அரியகோஷ்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், சமீப காலமாக, அகரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை சின்னக்கடை வரை, சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, இந்த சாலையில் இரு வாகனங்கள் எதிர் எதிரே செல்லும்போது ஒதுங்கிச் செல்ல இடம் இல்லாமல், அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதையடுத்து, சிதம்பரம் உட்கோட்டத்தில் ஏ.எஸ்.பி., யாக இருந்த துரை, பரங்கிப்பேட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, சிதம்பரத்தில் இருந்து சாமியார்பேட்டை வரை வந்து செல்லும் பஸ்கள், மாற்று வழியாக வந்து செல்ல சில மாற்றங்கள் செய்தார்.
அதன்படி, சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து சென்ற அரசு பஸ்கள் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்துடன் திரும்பிச் செல்லவும், சிதம்பரத்தில் இருந்து சாமியார்பேட்டைக்கு செல்லும் பஸ்கள் வழக்கம்போல் சென்று, சிதம்பரத்திற்கு வரும்போது பரங்கிப்பேட்டை சின்னக்கடை, பெரியத்தெரு முனை, பெரியக்கடை வழியாக சிதம்பரத்திற்கு செல்வது முடிவு செய்யப்பட்டது.
இந்த மாற்று ஏற்பாட்டினால், போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது. ஆனால், அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் பஸ் நிலையத்தில் இறங்கி, ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதால் பாதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து மாற்றத்தை போலீசார் சரிவர நடைமுறைப்படுத்தாதால், சில வாரங்களிலேயே அனைத்து பஸ்களும் வழக்கமான பாதையில் சென்று வருகின்றன.
ஆனால், சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை வரை வந்து சென்ற அரசு டவுன் பஸ்கள், பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்துடன் திரும்பி சென்று விடுகின்றன. இதனால் பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு வரும் மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, பொது மக்கள், நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவிகளின் நலன்கருதி, வழக்கம்போல் சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை வரை அரசு டவுன் பஸ்கள் வந்து செல்ல சிதம்பரம் உட்கோட்ட டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக