புதுச்சேரி: சென்னையைப் போலவே புதுச்சேரியிலும் ரியல் எஸ்டேட் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் இடம் வாங்குவது, நிலம் வாங்குவது எட்டாக்கனியாகி வருகிறது.
ஏகப்பட்ட தொழிற்சாலைகளும் எல்லோருக்குமே வேலை வழங்கும் ஊராக திகழ்கிறது புதுச்சேரி. தடையில்லா மின்சாரம் காரணமாக பல்வேறு இந்திய தொழில் நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் புதுச்சேரியில் ஏகத்துக்கும் முதலீடு செய்து தொழில் நிறுவனங்களைத் துவக்கி வருகின்றன. அதே போல பல்வேறு முன்னணி தொழிலதிபர்களும், சாப்ட்வேர் நிறுவனங்களும் புதுச்சேரியில் ரியல் எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து நிலங்களை வாங்கிக் குவித்து வருகின்றன.
இதனால் புதுச்சேரியில் சமீபகாலமாக ரியல் எஸ்டேட் விலைகள் விண்ணைத் தாண்ட ஆரம்பித்துள்ளன. புதுச்சேரி நகருக்குள் இப்போது ரூ. 45 லட்சத்துக்குக் கீழ் நல்ல வீட்டை வாங்க முடியாத நிலைமை உருவாகிவிட்டது. ஒரு சென்ட் என்ற கணக்கெல்லாம் போய் பெங்களூர் மாதிரி ஸ்கொயர் பீட் கணக்கில் நிலம் வாங்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. ஒரு 1,200 சதுர அடி நிலத்தை வாங்கிவிட்டாலே நடுத்தர மக்கள் பெரும் மகிழ்ச்சி கொள்ள நிலைமை வந்துவிட்டது.
ஒரு காலத்தில் தனித்தனி வீடுகளே பெருமையாக இருந்த நிலைமை போய், அபார்ட்மெண்ட்களும் ஏகத்துக்கும் வந்துவிட்டன. வெளிநாடுகளில் வசிக்கும் என்ஆர்ஐக்கள் பெங்களூர், சென்னைக்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் வீடோ அல்லது அபார்ட்மெண்ட்டோ வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலைகளில் வேலை பார்க்க தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்களும் பணியாளர்களும் புதுச்சேரியில் குவிந்து வருவதால் வீடுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வாடகைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. புதுச்சேரி-கடலூர் இடையிலான நிலங்கள், வயல்கள் எல்லாம் பிளாட் போடப்பட்டு வருகின்றன. மிகச் சிறிய நகரமான பாண்டிச்சேரியில் இப்போது 12 லட்சம் பேர் வசிக்கின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்திறங்கிக் கொண்டே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக