திங்கள், 29 ஜூலை, 2013

தமிழக காவல்துறையின் மதச்சார்பு!

ஒருகாலத்தில் தமிழக காவல்துறை, குற்றங்களைப் புலனாய்வு செய்வதில் இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லண்ட் யார்ட் காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்டது.
பல்வேறு அரசியல் காரணங்களுக்காக காவல்துறையினர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, ஒரு சந்தர்ப்பத்தில் தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டதாக வருத்தப்பட்டுச் சொன்னார். சிலகாலம் தமிழக காவல்துறைமீது இத்தகைய குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருந்தது.
கடந்தவாரம் சேலம் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் சிலரது புகைப்படங்களை வெளியிட்டு , துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது தமிழக காவல்துறை. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் தவறில்லை என்பதுபோல் தெரிந்தாலும் தமிழக காவல்துறையின் இந்த அறிவிப்பு மதரீதியிலானது என்பது தெளிவாகிறது.

ஆடிட்டர் ரமேஷ் கொலையைத் தொடர்ந்து, இந்து அமைப்புகள் அதை மதரீதியில் பிரச்சினையாக்கி வருகின்றன. பாஜக சார்பில் ஒரு நாள் கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டதோடு, தமிழகத்தில் இந்து அமைப்புகளின் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற பிரச்சாரத்தையும் எழுப்பினர். .இதன் பின்னணியை ஆராய்ந்து மக்களவையில் பிரச்சினையைக் கிளப்பவும் பாஜக தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்தால்,அதிமுகவின் வெற்றிவாய்ப்பு குறைவு என்பதால் அதிமுக தனித்துப்போட்டியிடாது.பலமற்ற மூன்றாவது அணியைவிட, ஜெயலலிதாவின் நண்பரான மோடியை பிரதமராக முன்னிறுத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணிவைப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அதுபோல், பாஜகவிலும் உட்கட்சிப் பிரச்சினைகளையும் தாண்டி குறைந்தபட்ச இடங்களைப் பெறும்பட்சத்தில் அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு அவசியம்.

இந்நிலையில், தர்மசங்கடத்துக்குள்ளான முதல்வர் ஜெயலலிதா, நூற்றுக்கும் மேற்பட்ட சங்பரிவார பிரமுகர்களுக்குக் காவல்துறை மூலம் சிறப்புப் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளார். நாட்டில் தினந்தோறும் எத்தனையோ கொலைகள் நடந்து அதற்கான விசாரணைகள் ஆமைவேகத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஆடிட்டர் ரமேஷ் கொலைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருப்பது நடுநிலை அரசுக்கு அழகல்ல.

திமுக முன்னாள் அமைச்சரின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சிறு துரும்பைக்கூட அசைக்காத காவல்துறை, ஆடிட்டர் ரமேஷ் விசயத்தில் போஸ்டர் வெளியிட்டிருப்பது, சங் பரிவாரங்களைத் தாஜா செய்யும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக நடத்திய கடையடைப்பின்போது குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு, கடைகளை மூடும்படி காவல்துறை ஆய்வாளர்களே சொன்னது நல்ல அறிகுறியாகப் படவில்லை.பேருந்துகளை உடைத்து நாசப்படுத்திய பா ஜ க மீது பா ம க மீது மேற்கொண்டதைப்போன்ற நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல்துறை என்பது அரசின் செயல்பாடுகளையும் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்படவேண்டியது அவசியம். ஆனால், ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கில் நால்வரின் புகைப்படத்தை வெளியிட்டு ,தேடப்படும் குற்றவாளிகளைப் போன்று துப்புகொடுத்தால் பரிசு என்று அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

காவல்துறையின் இத்தகைய மதச்சார்பு அணுகுமுறை அதன் மீதான நம்பகத்தன்மையைச் சிதைக்கும் என்பதோடு,மதரீதியில் கலவரம் உண்டாக்க நினைக்கும் சங்பரிவாரங்களுக்கு ஊக்கமளிப்பதாகவே இருக்கும். கோவையிலும்,குஜராத்திலும் சங்பரிபாரக் குண்டர்களுடன் காவல்துறையும் கைகோர்த்ததாலேயேஅதிமான இழப்புக்ளைச் சிறுபான்மையினர் சந்தித்தனர் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

ஆதாரங்களின் அடிப்படையில் முறையாக விசாரித்துக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் முன்பாகவே, காவல்துறையினர்குற்றவாளிகளை நிர்ணயம் செய்துகொண்டு அவர்களைப்பற்றித் துப்புக் கொடுக்கும்படி அறிவிப்பதும் சிலரது புகைப்படங்களை வெளியிட்டு துப்புக் கொடுத்தால் பரிசு அறிவித்திருப்பதும் நீதிமன்றத்தையே மதிக்காத செயலாகவே கருதப்பட வேண்டும்.

கட்டுரையாளர்-எழில் பிரகாசம்-
 
நன்றி:இந்நேரம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக