ஞாயிறு, 9 ஜூன், 2013

கடலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் தீவிர ஆய்வு

கடலூர் :வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில், பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 கடலூர் மாவட்டத்தில், கோடை விடுமுறைக்குப்பின் அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்படுகின்றன. இந்நிலையில் பள்ளி வாகனங்கள் பராமரிப்பு குறித்து வட்டார போக்குவரத்து துறையினர் முழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, கடலூர், பரங்கிப்பேட்டை ,வடலூர் பகுதிகளில், பள்ளிகளால் நேரடியாக பராமரிக்கப்படும் பள்ளி வாகனங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இயக்கப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கடலூரில், 150 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தலைமையில் ஆய்வாளர்கள் காளியப்பன், அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
 இந்த ஆய்வு குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது: மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு, வாகனங்கள் முழுமையான சோதனை செய்யப்படுகின்றன.
இதுவரை எந்த குறைபாடும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் தனியார் வாகனங்களிலும் மாணவர்கள் செல்கின்றனர். இதுபோன்ற வாகனங்களுக்கும் பள்ளி நிர்வாகம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் பள்ளி வாகனம் போன்று விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்களை ஏற்றிச் சென்றால் வாகன அனுமதி ரத்து செய்யவும், பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து பள்ளி திறப்பிற்கு பிறகு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக