திங்கள், 3 ஜூன், 2013

இணைவைத்தல் ஒரு பெரும் பாவம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அன்பான இஸ்லாமிய சொந்தங்களே! நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்த கட்டுரை போட்டியில் "இணை வைத்தல் பெரும்பாவம்" என்ற தலைப்பில் எனது கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன்.

இந்த உலகத்தில், மனிதர்களையும், ஜின்களையும் படைத்த அல்லாஹ் தன்னை மட்டுமே வணங்க சொல்லி கட்டளை இடுகிறான். ஆரம்பத்தில் மனிதன் தான் பயந்ததையும், அவனுக்கு உதவிய வஸ்துக்களையும் கடவுளாக நினைத்து வணங்க ஆரம்பித்தான். இவ்வாறு தான் கண்டதையெல்லாம் கடவுளாக நினைத்து, எந்த வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்த வந்த மனிதர்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் ரப்புல் ஆலமின் தூதர்களை அனுப்பினான். தூதர்கள் அனைவராலும் கர்ப்பிக்கபட்டது ஒன்றே ஒன்றுதான். அது, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே. அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.

ஆனால் அநாச்சாரங்களிலும், அட்டுளியங்களிலும் மூழ்கி கிடந்த மனிதர்கள் தூதர்களை கொன்றார்கள். சிலரோ அவர்களை கடவுள் ஆக்கினார்கள்.

இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களை தனது தூதராக அனுப்பி மக்களை நேர்வழிப்படுத்தினான். அது மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான குர்ஆனையும் அருளினான். அதில் மக்களுக்கு கூறப்படும் செய்தியை கேளுங்கள்.

மனிதர்களையும், ஜின்களையும் என்னை வணங்குவதற்காக தவிர வேறு எதற்காகவும் படைக்கவில்லை. (51:56)

கூறப்படும் செய்தியானது மனிதர்களை மட்டுமின்றி ஜின்களையும் அவனை வணங்குவதற்காகவே படைத்தது இருக்கிறான். மனிதர்கள் அவ்வாறு வணங்குவதைக் கொண்டே தன்னிடம் உதவியும் கேட்க சொல்கிறான்.

படைத்தவனை வணங்குவதை விட்டு, படைப்புகளை வணங்குபவர்களில் இரு வகையினர். ஒரு வகையினர் இஸ்லாத்தை மறுப்பவர்கள். இரண்டாவது வகையினர் இஸ்லாத்தை ஏற்று, அல்லாஹ்வே படைத்தவன் என்று நம்பி அவனது வேதத்தையும், தூதரின் கட்டளையை மீறுபவர்கள். இதில் நாம் இரண்டாவது வகையினரைப் பற்றியே பாப்போம்.

பொறுமையை கொண்டும் தொழுகையையும் அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக (2:153) என்ற வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கு கட்டளை இடுகிறான். ஆனால் மனிதர்களோ அதை எல்லாம் கேட்க்காமல் மனிதர்களில் வாழ்ந்து மரணித்த நன்மக்களை அல்லாஹ்வுக்கு இணையாக வைத்து வணங்குகிறார்கள். அவர்களிடமே உதவியும் தேடுகிறார்கள்.

என்னதான் மனிதர்களுக்கு அவர்களின் செயல்கள் நன்மையாகவும், சொர்க்கத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் செயலாகவும் இருப்பினும் அவர்களின் உள்ளங்களின் இருந்ததை அல்லாஹ் மட்டுமே அறிவான். ஒருவருக்கு சொர்க்கம், நரகம் என்பது அவர்களின் செயல்களைப் பொருத்து மட்டும் அமைவதில்லை. அவர்களின் எண்ணத்திலும் அமைகிறது.

ஆனால் மக்களோ அவர்களின் செயல்களை வைத்து, அவரை கடவுளின் அந்தஸ்துக்கு உயர்த்துகிறார்கள். அவ்வாறு செய்வது இஸ்லாத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். கீழே நபிகள் நாயகம் (ஸல்) கூறும் செய்தியை படியுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களை நோக்கி: "பெரும்பாவங்களில் மிகப் பெரிய பாவத்தை உங்களுக்கு நான் அறிவித்து தரட்டுமா?" என மூன்று முறை கூறினார்கள். அதற்க்கு நாங்கள் "ஆம்! அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வுக்கு இணை வைப்பதுதான் அந்தப் பெரும் பாவமாகும்" என்று கூறினார்கள். (சஹீஹுல் புஹாரி, முஸ்லிம்)

படித்தீர்களா?. பாவம் என்பதை விட்டும் மிகப்பெரிய பாவம் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாகும். அல்லாஹ் தான் நாடியோரை மன்னிப்பேன் என்கிறான். அதே சமயத்தில் தனக்கு இணை வைத்துவிட்டால் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறுகிறான். அதையும் கேளுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4:48)

இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்த வரை அல்லாஹ்வுக்கு இணை வைப்பது என்பது மார்க்கத்தை விட்டே வெளியேறும் செயல் ஆகும். அதற்க்கு தவ்பா செய்யாமல் மரணித்து விட்டால் நிரந்த நரகில் தள்ளப்பட்டு விடுவார்.

அவ்வாறென்றால், அடக்கஸ்தலத்தில் இருப்பவர்களை வணங்குவது ஷிர்க் ஆகுமா என்ற கேள்வி எழலாம். காரணம் இன்று அதுவே பல செயல்களுக்கு மூலக்காரணமாக இருக்கிறது. அடக்கஸ்தலத்துக்கு சென்று அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய சொல்வதும், அங்கே இஸ்லாம் வலியுறுத்தாத செயல்கள் செய்வதும் பெரும் பாவமாகும். அதைப்பற்றி அல்லாஹ் அவனது திருமறையில் கூறுவதை கேளுங்கள்.

நபியே உங்களது இறைவன் தன்னைத்தவிர வேறு எதையும் வணங்கக் கூடாது என்று கட்டளையிடுகிறான். (17:23)

நபியே நீங்கள் கூறுங்கள் சிபாரிசு அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (39:44)

மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டால் தர்காவில் இருக்கும் மகான்களே நமக்கு உதவுவார்கள் என்று நம்பி அங்கே சென்று கை ஏந்தி அல்லாஹ்வை வணங்குவதை போலவே வணங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். கப்ரை சுற்றி வருவதும், அதை தொட்டு தடவுவதையும், மண்ணை எடுத்து பூசிக்கொள்வதும், தேவையை நிறைவேற்ற சொல்லி கோருவதும் மிகப் பெரிய பாவமாகும்.

நிச்சயம் அல்லாஹ் மன்னிக்காத பாவத்தின் வரிசையில் அது வந்துவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "யார் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறொன்றை அவனுக்கு நிகராக ஆக்கி அதனிடம் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறாரோ அவர் நரகத்தில் நுழைவார். (சஹீஹுல் புஹாரி)

மக்களுக்கு நன்மையோ, தீங்கோ; அதை அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் நீக்க முடியாது. ஆனால் மக்களோ, தங்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்ப்பட்டு விட்டால் தர்காவுக்கு சென்று நேர்ச்சை செய்து கொள்வதும், நன்மை நடந்தால் நேர்ச்சையை நிறை வேற்றுவதுமாக இருக்கிறார்கள். இவை எல்லாம் நம் மார்க்கத்தில் இல்லாத ஒரு செயல். இன்று நம்மவர்களால் செய்துக் கொண்டு இருக்கும் இந்த செயலை கண்டித்து அல்லாஹ் சுபஹானஹுத்தாலா பல வசங்களை அருளியுள்ளான்.

அன்று முஸ்லிம்கள் எதை செய்ய கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் தடுத்தார்களோ அதை இன்று முஸ்லிம்களில் சிலரோ அல்லது பலரோ ஆகுமாக்கி கொண்டு இருக்கிறார்கள். மனிதர்கள் ஏதேனும் ஒரு கருத்தை சொன்னால் அதை ஏற்ப்பதும், ஏற்காமல் இருப்பதும் அவர்கள் அவர்களின் விருப்பம்.

அதே சமயத்தில் அல்லாஹ் கட்டளை இட்டதையும், அவனது தூதர் கூறியதையும் ஒருவர் மருப்பறேயானால் அது மிகப்பெரிய பாவமாகும்.

எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து அவன் ஏற்ப்படுத்திய வரம்புகளை மீறுகிறானோ, அவனை நரகத்தில் புகுத்தி விடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கி விடுவான். இழிவு படுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு. (4:14)

(இத்தூதர்) நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். தீயவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார். (7:157)

ஆகவே, இஸ்லாமிய சொந்தங்களே விழித்துக் கொள்ளுங்கள். நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள். நரம் என்பதை நாம் பார்க்காதவரை அதனுடைய பயங்கரம் நமக்கு தெரியாது. நரகத்தை பற்றி நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுக்கு அறிவிக்கும்போது தாடி நனையும் அளவுக்கு அழுவார்கள். அதனால், நாமும் ஷிர்க் என்ற பாவ காரியத்தை விட்டு வெளியேறி, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுவோமாக. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்.

ஜசகல்லாஹ்.

முக நூல் திண்ணை குழுமத்தில் நடந்த ட்டுரை  போட்டி யில் பங்குபெற்ற கட்டுரை
இந்த கட்டுரையே நமக்கு அளித்தது
கட்டுரையாளர் :சகோதரர் : அப்துல் பாசித்
நன்றி :திண்ணை குழுமம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக