கடலூர்:கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதத்துக்குள்(ஜூலை) முடிவடையும் என திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கநாதன் தெரிவித்தார்.கடலூரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த லாரன்ஸ் சாலையில் ரெயில்வே கேட் மூடப்படும் போது சாலையின் இருபக்கமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் விபத்துக்கள் ஏற்படும் அபாய சூழ்நிலைகளும் உருவானது. இதை தடுக்கும் வகையில் லாரன்ஸ் சாலையின் குறுக்கே ரூ.2 கோடியே 13 லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. சுரங்கப்பாதை அமைக்கும் முதல் கட்ட பணிகளை ரெயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி லாரன்ஸ் சாலையின் குறுக்கே தண்டவாளத்தின் கிழக்கு பகுதியில் பள்ளம் தோண்டி 3 ராட்சத கான்கிரீட் தளங்களை பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 2 கான்கிரீட் தளங்களை பொருத்தும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது 3–வது கான்கிரீட் தளம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மஞ்சுளா ரங்கநாதன் நேற்று திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் ரெயில்வே சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் தண்டவாளங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தார். தொடர்ந்து சுரங்கப்பாதைக்காக கான்கிரீட் தளம் பொருத்தும் பணியை பார்வையிட்டார்.
அப்போது ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கான்கிரீட் தளம் தரைப்பகுதியில் எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளது மற்றும் அதன் உறுதி தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து கான்கிரீட் தளத்தின் மைய பகுதி வழியாக உள்ளே சென்று பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
ரெயில்வே சுரங்கப்பாதை பணியை ஆய்வு செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். சுரங்கப்பாதைக்காக ஏற்கனவே 2 கான்கிரீட் தளங்கள் தண்டவாளத்துக்கு அடிப்பகுதியில் பூமியில் புதைக்கும் பணி நடைபெற்றுள்ளது. தற்போது 3–வது கான்கிரீட் தளம் தயார் செய்து தர ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு பிறகு 3–வது கான்கிரீட் தளம் பொருத்தும் பணி நடைபெறும்.
ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை பொறுத்தவரை 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. அடுத்த மாதம்(ஜூலை) நடுவில் சுரங்கப்பாதைக்காக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிடும். அதன் பின்னர் குறைந்த வேகத்தில் பாதுகாப்பான முறையில் ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– கடலூர் துறைமுகம்–திருச்சி, பெங்களூர்–நாகப்பட்டினம் பயணிகள் ரெயில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வரை நீட்டிக்கப்படுமா?
பதில்:– பயணிகள் விடுக்கும் கோரிக்கைகள் குறித்த விவரங்களை மேல் அதிகாரிகள் மூலமாக ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அவர்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.
கேள்வி:– திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் எந்தெந்த ரெயில் பெட்டிகள் எந்தெந்த இடத்தில் நிற்கும் என்பதை பயணிகள் எளிதாக அறிந்து கொள்வதற்காக பிளாட்பாரங்களில் தகவல் பலகை வைக்கப்படுமா?
பதில்:– முதல் கட்டமாக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பதில் தான் நாங்கள் அதிக அக்கரை செலுத்தி வருகிறோம். பின்னர் போதிய நிதி ஒதுக்கீடு செய்து எந்தெந்த ரெயில் நிலையங்களில் என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பதை ஆய்வு செய்து அவற்றை படிப்படியாக சரி செய்வோம்.
கேள்வி:– புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டிடம் திறக்கப்படாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். புதிய கழிப்பறை எப்போது திறக்கப்படும்?
பதில்:– பலமுறை டெண்டர் விட்டும் யாரும் கழிப்பறையை எடுத்து நடத்த முன்வரவில்லை. இதனால் அதை திறப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. உள்ளூர் நபர்கள் யாராவது முன்வந்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மூத்த கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ஷேசாத்திரி, சுரங்கப்பாதை கட்டுமான பொறியாளர் கணபதி, பொறியாளர்(மின்பிரிவு) சந்திரசேகர், இருப்புப்பாதை பொறியாளர் ஆனந்தன், ரெயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கநாதன் ஆய்வு செய்து கொண்டிருந்த போது அவரிடம் பயணிகள் சிலர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை, பயணிகள் நடந்துசெல்வதற்கு மாற்றுப்பதை இல்லை, ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் நிறையபேர் அனுமதியின்றி கடை நடத்தி வருகிறார்கள் என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இதை கேட்ட அவர் பொதுமக்கள் யாரும் தண்டவாளத்தை கடந்து செல்ல கூடாது. நடைபாதை மேம்பாலம் வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டும். குடிநீர் வசதி செய்து கொடுத்த பின்னரும் சிலர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி செயல்படும் கடைகளை அப்புறப்படுத்தவும், பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும் பாதையை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ரெயில் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி நடைபெறும் கடைகளை அப்புறப்படுத்தவும், பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும் பாதையை மூடவும் உத்தரவிட்டார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக