ஞாயிறு, 16 ஜூன், 2013

கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்த 2¾ லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள்

கடலூர் :கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த மே மாதம் வரை 2¾ லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.
1–ம் வகுப்பு முதல் படித்த பட்டதாரிகள் வரை அனைவரும் அரசு வேலை கிடைக்க வேண்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். சாதாரண துப்புரவு பணியாளர் வேலைக்கு எழுத்தறிவு இருந்தால் மட்டும் போதுமானது. இதேபோல் பல்வேறு அரசு வேலைகள் பெறுவதற்காக 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஜ. போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளை படித்தவர்கள் பதிவு செய்து வருகின்றனர். பதிவு செய்து 3 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க தவறினால், மீண்டும் புதுப்பிக்க 18 மாத காலம் அவகாசம் வழங்கப்படும்.
அதை பயன்படுத்தி புதுப்பித்து கொண்டால் பதிவு மூப்பு வழங்கப்படும். தவறும் பட்சத்தில் பதிவு மூப்பு ரத்து செய்யப்படுவதுடன், புதிதாக தான் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த மே மாதம் 31–ந் தேதி வரை 2 லட்சத்து 71 ஆயிரத்து 182 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 946 பெண்களும். 1 லட்சத்து 39 ஆயிரத்து 236 பேர் ஆண்களும் அடங்குவர். இதில் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் 60 ஆயிரத்து 902 பேரும், 12–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 70 ஆயிரத்து 228 பேரும், பட்டதாரிகள் 15 ஆயிரத்து 382 பேரும், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் 7 ஆயிரத்து 557 பேரும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
டிரைவருக்கு பதிவு செய்தவர்கள் 5 ஆயிரத்து 840 பேரும், கண்டக்டருக்கு 5 ஆயிரத்து 840 பேரும், ஐ.டி.ஜ. முடித்தவர்கள் 11 ஆயிரத்து 798 பேரும், உடல் ஊனமுற்றோர் 3 ஆயிரத்து 410 பேரும் உள்பட பல்வேறு நிலைகளில் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். வருகிற 20–ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்ய உள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை அடுத்த மாதம் முதல் மேலும் அதிகரிக்கும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக