சனி, 25 மே, 2013

பெற்றோர் சிறப்புகள்

நமது இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று கட்டளை இடுவதுடன் பெற்றோர்களுக்கும் உபகாரம் செய்யுமாறு கட்டளை இடுகிறது.
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்று உமது இறைவன் கட்டளையிடுகிறான்." (அல்குர்ஆன் 17:23)
மேற்கண்ட வசனம் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் இருப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல பெற்றோருக்கு உபகாரம் செய்வதும் அவசியமாகும்
என்பதை உணர்த்துகிறது. அல்லாஹ்விற்கு இணை வைக்க கூடாது என்பதற்கு காட்டும் அக்கரையை நாம் பெற்றேரை மதிப்பதில் காட்டுவது இல்லை. அதை நாம் ஒரு பெரிய விசயமாக நினைப்பதும் கிடையாது.
இங்கு நான் படித்த ஒரு நீதிக் கதையை கூற விரும்புகிறேன்.
"ஒரு வசதியான வீட்டின் ஹலலில் 80 வயது மதிப்புள்ள பெரியவர் (முதியவர்) ஒருவர் ஜன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். வயதான அவரது மனைவி அவருக்கருகில் உட்கார்ந்து குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறார்.
பக்கத்திலேயே அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஒரு காகம் அந்த பெரியவருக்கு பக்கத்தில் ஜன்னல் அருகே வந்து உட்கார்ந்தது.
“இது என்ன ?” என்று பெரியவர் கேட்டார்.
லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த பெரியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”
“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த பெரியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”
சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”
இன்னும் சிறிது நேரம் கழித்து அவரது வாப்பா நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”
மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது வாப்பாவைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால
புரிஞ்சுக்க முடியலையா?”
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, வாப்பாவின் முகத்தில் எந்தவித
உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி
எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய டைரி ஒன்று இருந்தது.
அது அந்த வாப்பாவின் டைரி. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.
“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது ஜன்னலில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.
இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த
தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.
"(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக) ‘ச்சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)"
தன் தவறை உணர்ந்த் அந்த மகன் இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கேட்டு அழுதார்.
இன்றும் நம்மில் பலர் அப்படித்தான் இந்த நீதிக் கதையில் வந்த மகன் போல் இருக்கிறோம். அல்லாஹ்வுக்கு இணைவைத்தலை எப்படி ஒரு மிகப் பெரிய பாவமாக நினைத்து ஜாக்கிரதையாக இருக்கிறோமோ அதே போன்று பெற்றோர் விசயத்திலும் நம் தவறை உணர்ந்து அவர்களுக்கு உபகாரம் செய்து அவர்களை கண்ணியப் படுத்த வேண்டும்.
-
கட்டுரையாளர்  செல்வி. சஞ்சீதா ஃபக்ருத்தீன்
Ms. Sanjeetha Fakrudeen
(D/o. M.G. Fakrudeen)
V Std. Kalima School
Parangipettai

முக நூல் திண்ணை குழுமத்தில் நடந்த ட்டுரை  போட்டி யில் பங்குபெற்ற கட்டுரை
இந்த கட்டுரையே நமக்கு அளித்தது கலிமா ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி..சஞ்சிதா அவர்கள் ஜனாப் : MG.பக்ருதீன் (MYPNO இணையதள ஆசிரியர்) அவர்களின் மகள் ஆவர்
நன்றி :திண்ணை குழுமம்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக