வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, சிவரஞ்சனிக்கு கிடைத்துள்ளது

 Kalpana Chawla Award Mother Daughter Duo சென்னை: நகைகளை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களை போராடி பிடித்து போலீசில் ஒப்படைத்த தாய், மகளுக்கு வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின
விழாவில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
நாட்டின் 66-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டை கொத்தளத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோட்டையில் கொடி ஏற்றி வைத்த ஜெயலலிதா, பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கான விருதுகளை முதல்வர் வழங்கினார்.

கல்பனா சாவ்லா விருது

வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, சிவரஞ்சனிக்கு கிடைத்துள்ளது. இவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.உடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் மனைவி, மகளாவார். இவர்கள் இருவரும் வீட்டிற்குள் இருவரும் தனியாக இருந்தபோது கொள்ளையர்கள் 2 பேர் வீட்டுக்குள் புகுந்து இருவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றனர்.ஆனால், இருவரும் போராடி கொள்ளையர்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இரண்டு பெண்களின் இந்த வீரதீரச் செயலைப் பாராட்டி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சுதந்திர தின விழா மேடையில் இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 10 கிராம் தங்கப் பதக்கம் இருவருக்கும் அணிவிக்கப்பட்டது. மேலும் ரூ.5 லட்சம் காசோலையும் அளிக்கப்பட்டது

மாற்றுத்திறனாளிகள் நலன்
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருதுகளை ஜெயலலிதா வழங்கினார். சிறந்த மருத்துவருக்கான விருது-சென்னை மெடிந்தியா மருத்துவமனை டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர், சிறந்த சமூக பணியாளருக்கான விருது-சென்னையில் உள்ள மதுரம் நாராயணன் சிறப்பு குழந்தைகளுக்கான மையத்தை சேர்ந்த ஜெயா கிருஷ்ணசாமி, சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது-சென்னை நேத்ரோதயா அமைப்பு, அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த நிறுவனம்-கோயம்புத்தூர் டெக்ஸ்மோ இண்டஸ்ட்ரீஸ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது-சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது. அதன்படி, மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனங்களான - நீலகிரி மாவட்டம், ஊட்டி சமூக சேவை நிறுவனம், சிறந்த சமூக பணியாளருக்கான விருது- ராமநாதபுரம் மாவட்டம், சீதக்காதி என்ற அரசு சாரா நிறுவனத்தின் திட்ட அலுவலர் டாக்டர் எஸ்.சுமயா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகள்
சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான `மாண்புமிகு முதல்-அமைச்சர் விருதுகள்' வழங்கப்பட்டன. அதன்படி, சிறந்த மாநகராட்சிக்கான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கும், சிறந்த நகராட்சிகளுக்கான விருதில் முதல் பரிசு- பொள்ளாட்சி நகராட்சிக்கும், 2-ம் பரிசு- தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கும், 3-ம் பரிசு-நாமக்கல் நகராட்சிக்கும், சிறந்த பேரூராட்சிக்கான விருதில், முதல் பரிசு-தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சிக்கும், 2-ம் பரிசு- திருச்சி மாவட்டம், முசிறி பேரூராட்சிக்கும், 3-ம் பரிசு-ஈரோடு மாவட்டம், பெருந்துறை பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டது.
மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் (பெசன்ட் நகர்) கடற்கரைகளில் சிறப்பாக பணியாற்றிய கடலோரக் காவல் படையினர் அப்துல்காதர் அக்பர், ராகேஷ்குமார், பல்வந்த், ராஜ்குமார் டோக்காஸ் ஆகியோருக்கு கடலோர காவல் படையினருக்கான பாராட்டு சான்றிதழ்களை முதல்-அமைச்சர்  வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக