கடலூர் மாவட்டம் சிதம்பரம், லால்கான் தெருவில் தாலுகா அலுவலகம் அருகே பத்திரபதிவு
அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு
இன்ஸ்பெக்டர்கள் திருமலை, சதீஷ், திருவேங்கடம் மற்றும் போலீசார் அதிரடி சோதனை
நடத்தினார்கள். அலுவலகத்தில் இருந்த இனைப்பதிவாளர் சீனிவாசன், அலுவலக உதவியாளர் கலியபெருமாள் உள்ளிட்ட 10 பேர் இருந்தனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனை நள்ளிரவு 12.30 மணிவரை நீடித்தது.
சோதனையின்போது சீனிவாசன், கலியபெருமாள் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத பணம் ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சார்பதிவாளர் அலவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியபோது அதே வீதியில் இருந்த பத்திர எழுத்தர்கள் தங்கள் அலவலகங்களை பூட்டி விட்டு ஓடிவிட்டனர்.
அதிரடி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று பதிவு செய்யப்பட்ட 99 பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவை முறையான ஆவணங்கள் இன்றி புரோக்கர்கள் மூலமாக பணம் பெற்றுக்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளன.
பதிவு செய்ய யார் யாருக்கெல்லாம் புரோக்கர்கள் பணம் கொடுத்தார்கள் என்பது குறித்த துண்டு சீட்டுகள் கிடைத்துள்ளன. முறைகேடு தொடர்பாக இணைப்பதிவாளர் சீனிவாசன், அலுவலக உதவியாளர் கலியபெருமாள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்படும்.
விசாரணையின் முடிவில் நீதிமன்ற உத்தரவு பெற்று அவர்கள் கைது செய்யப்படுவார்கள். முறையான ஆவணங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ள பதிவுகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள புரோக்கர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, அவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
மேலும் தவறான முறையில் பதிவுகள் செய்ய உறுதுணையாக இருந்த அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். தேவைப்பட்டால் பத்திர எழுத்தர்களிடமும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக