திங்கள், 16 ஜூலை, 2012

சிதம்பரம் - மானம்பாடி பரங்கிப்பேட்டை சாலையை சீரமைக்கவலியுறுத்தி சாலை மறியல்

பரங்கிப்பேட்டை:சிதம்பரம் - மானம்பாடி சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியல் செய்ய மா.கம்யூ., கட்சி முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மா.கம்யூ., பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலர் கற்பனைச்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:சிதம்பரத்திலிருந்து அண்ணாமலைநகர் வழியாக பெரியமதகு, சி.மானம்பாடி செல்லும் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலை யில் உள்ளதை சுட்டிக்காட்டி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து தார் சாலையாக அமைக்க வலியுறுத்தியும் சிதம்பரம் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்த சாலையின் தூரம் 5 கிலோ மீட்டர். இதில் சிதம்பரத்திலிருந்து பின்னத்தூர் முஸ்லிம் தெருவரை போடப்பட்ட சாலை தரமற்றநிலையில் உள்ளதை உடன் சரிசெய்ய வலியுறுத்தியும் இதுநாள் வரை சீர்செய்யப்படவில்லை.
அதேபோல் பெரியமதகிலிருந்து வடக்குசாவடி, நஞ்சமகத்துவாழ்க்கை, மடுவங்கரை, வழியாக சி.மானம்பாடி வரை செல்லும் சாலை செம்மண் சாலையாக உள்ளதை இதுநாள் வரை தார் சாலையாக மாற்றவில்லை. இந்த சாலையும் சமனற்று குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.இந்த சாலையை உடனடியாக தார்சாலையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி பொதுமக்களை திரட்டி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக