திங்கள், 9 ஜூலை, 2012

பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி


பரங்கிப்பேட்டை : கிள்ளை அருகே தார்சாலை போடும்பணி இரண்டு ஆண்டாக கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கிள்ளை அடுத்த மேலச்சாவடி பெரியமதகில் இருந்து நஞ்சைமகத்துவாழ்க்கை வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைத்துறை சாலை உள்ளது. இந்த சாலையை மடுவங்கரை, நஞ்சைமகத்துவாழ்க்கை, வடக்குச்சாவடி, குண்மேடு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலையை புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டு பணி துவக்கப்பட்டது. முதல் கட்டமாக முக்கால் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக தார் சாலை அமைப்பதற்காக சாலை ஓரங்களில் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டதோடு சரி. கடந்த இரண்டு ஆண்டாக பணி துவங்காததால், முதலில் போடப்பட்ட முக்கால் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து சிதறிகிடக்கிறது.
இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள், மோட்டார் பைக் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் பைக்கில் செல்பவர்கள் கருங்கல் ஜல்லியில் வழுக்கி விடுவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. வாகனங்களும் அடிக்கடி பஞ்சராகி விடுகிறது.
இந்த மோசமான சாலையால் பெரும்பாலான வாகனங்கள் இந்த வழியாக செல்வதை தவிர்த்துவிட்டு வடக்குச்சாவடியில் இருந்து புஞ்சைமகத்துவாழ்க்கை வழியாக மேலச்சாவடி பெரியமதகிற்கு
3 கி.மீ., தூரம் சுற்றி செல்கின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு காலவிரையம் ஏற்படுவதுடன் பண விரையமும் ஏற்பட்டு வருகிறது.
எனவே தார்சாலை போடும் பணியை உடனடியாக துவங்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக