சனி, 28 ஜூலை, 2012

பரங்கிப்பேட்டை அருகே பள்ளிக்கு இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் அலட்சியம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே உயர்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்ட 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் காட்டி வரும் அலட்சியத்தால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புலம்புகின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை 2010- 2011 ஆண்டு அனைவருக்கும் இடைநிலைக்
கல்வித் திட்டத்தின் கீழ் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பிறகு 5 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது தலைமை ஆசிரியர் உட்பட 9 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில், கொத்தட்டையைச் சுற்றியுள்ள சின்னக்குமட்டி, அத்தியாநல்லூர், ஹரிராஜபுரம், சில்லாங்குப்பம், பெரியகுமட்டி, குத்தாப்பாளையம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கட்டட வசதிகள் இல்லாததால் தற்போது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடங்களில் ஒரே கட்டடத்தில் மூன்று வகுப்புகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
அப்படி இருந்தும் இடம் பற்றாக்குறை காரணமாக பள்ளி வராண்டா மற்றும் மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக்கு கட்டடம் கட்ட 60 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு போதிய இடம் இல்லை.
போதிய இடத்தினை தேர்வு செய்வதில் கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் கிடப்பில் உள்ளது.
மேலும் மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் கழிப்பிட வசதி செய்துதர அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி இடம் இல்லததால் அந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மற்றும் ஊராட்சித் தலைவர் நாகராஜ் ஆகியோர் தமிழக முதல்வர், கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கு அருகிலேயே கூத்தாண்டவர் கோவில் புறம்போக்கு இடத்தில் உள்ள 60 ஏக்கர் இடத்தில் பள்ளிக்காக 5 ஏக்கர் இடத்தை ஒதுக்கி கட்டடம் கட்ட இந்து
அறநிலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக