கர்நாடகத்தில் நடைபெற்ற சுரங்க முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமாஜ பரிவர்தன அமைப்பின் தலைவர் ஹிரேமத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டவிரோத சுரங்க முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அதிகார குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தக் குழுவும் அண்மையில் தமது அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது.
ஜிந்தால் குழுமத்துக்கு சட்டவிரோதமாக சுரங்கங்களுக்கு அனுமதி கொடுத்ததால் எதியூரப்பா குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடை பெறப்பட்டது என்றும் அந்தக் குழு தமது அறிக்கையில் கூறியிருந்தது.
விசாரிக்க உத்தரவு
மத்திய அதிகாரக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைப்படி எதியூரப்பா மீதான புகார்கள் குறித்தும், ஜிந்தால் குழுமம்ம் மற்றும் செளத்வெஸ்ட் சுரங்க நிறுவனத்தின் பங்குகள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும் எதியூரப்பா புகார் மீதான நடவடிக்கை அறிக்கையை ஆகஸ்ட் 3-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தகர்ந்த கனவு
சுரங்க முறைகேட்டுப் புகாரினால்தான் எதியூரப்பா தமது முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. மேலும் சிறைக்குப் போய் விடுதலையாகி வந்த நிலையில் மீண்டும் முதல்வர் பதவி கேட்டு எதியூரப்பா கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இந்நிலையில் உச்சநீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் முதல்வர் பதவி என்ற எதியூரப்பாவின் கனவு தகர்ந்துள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக