
தமிழக கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் கடலோர பகுதியில் உள்ள சோதனை சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
சென்னையில் இருந்து ஆய்வு பணியை தொடங்கிய அவர் நேற்று கடலூர் துறைமுகம், புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய சோதனை சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் புயலால் பெரும்பாலான சோதனை சாவடிகள் உடைந்து கிடக்கின்றன. இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர கடலூர் முதுநகர் துறைமுகத்தில் போலீசாருக்காக 2 அதிவேக விரைவு படகுகள் வாங்கப்பட்டு இருந்தன.
இந்த படகுகளில் சென்று மற்ற படகுகளை சுற்றி வளைத்து எளிதில் பிடிக்கலாம். இத்தகைய படகுகள் தானே புயலில் சேதமடைந்து கிடக்கிறது. கொல்கத்தாவில் உள்ள சிறப்பு பொறியாளர்களை வரவழைத்து இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். விரைவில் அந்த படகுகள் சீரமைக்கப்படும். இந்த ஆய்வு பணியை ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை நடத்துகிறேன்.
இவ்வாறு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
பேட்டியின் போது சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு துரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தமிழ் மாறன்,ஆரோக்கியராஜ், கடலோர பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக