
கர்நாடகத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து உட்கட்சி மோதலால் நிலைகுலைந்து போயுள்ளது. சுரங்க முறைகேட்டில் சிக்கிய எதியூரப்யாவின் முதல் பதவி பறிக்கப்பட்டு சதானந்த கெளடாவுக்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் எதியூரப்பா அவ்வப்போது தமக்கு முதல்வர் பதவியோ கட்சித் தலைவர் பதவியோ கொடுக்க வேண்டும் என்று தமது ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு கட்சி மேலிடத்தை மிரட்டிக் கொண்டும் சதானந்தா கெளடாவுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டும் வந்தார்.
இந்நிலையில் எதியூரப்பா மீதான சுரங்க முறைகேடு புகாரை விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போனார் எதியூரப்பா. அப்போது அவருக்குக் கை கொடுத்ததுதான் எதியூரப்பா ஆதரவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கட்சித் தலைமைக்கு சதானந்தா கெளடா எழுதிய கடிதம். இதை வைத்துக் கொண்டு மீண்டும் ஆதரவாளர்களை ஒன்று திரட்டினார் எதியூரப்பா.
எதியூரப்பாவின் ஆதரவு அமைச்சர்கள் இம்முறை தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தையும் எதியூரப்பாவிடம் கொடுத்துள்ளனர். அவர்களது ஒரே கோரிக்கை கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான். பாஜக தலைவரான நிதின் கத்காரியும் எதியூரப்பாவை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்னுமொரு அதிரடியாக எதியூரப்பா சோனியா காந்தியை புகழ்ந்து தள்ளியிருந்தார். இதனால் அவர் காங்கிரசில் ஐக்கியமாவாரோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் காங்கிரசின் சித்தராமையாவோ, ஒருபோதும் எதியூரப்பாவை காங்கிரசில் சேர்க்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்.
இதனிடையே இன்று தும்கூரில் உள்ள சித்தகங்கா மடாதிபதியிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றார் எதியூரப்பா. இது லிங்காயத்து சமூகத்தினரின் உயரிய மடம். இந்த மடத்துக்குத்தான் அண்மையில் சோனியா காந்தி வருகை தந்திருந்தார். சித்தகங்கா மடாதிபதியிடம் ஆசீர்வாதம் பெற்ற எதியூரப்பா, எல்லா பிரச்சனைகளுக்கும் எம்.பி. அனந்தகுமார்தான் காரணம் என்று ஒரு போடும் போட்டார்.
இந் நிலையில் அமைச்சர்கள் ராஜினாமா, எம்.எல்.ஏ.க்களைத் திரட்டுவது என்று அதிரடியைக் கிளப்பி வரும் எதியூரப்பா இன்று மாலை தனது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அவர், கர்நாடக முதல்வர் சதானந்த கெளடாவும், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவும் என்னையும் எனது ஆதரவாளர்களையும் அவமதித்து வருகிறார். எனக்கு 71 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். அதில் 53 பேர் என்னுடன் ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளனர்.
ஆனால், நானோ எனது ஆதரவு அமைச்சர்களோ எம்எல்ஏக்களோ இப்போது ராஜினாமா செய்ய மாட்டோம். அதை மேலும் சில நாட்களுக்கு ஒத்தி வைக்கிறோம். நான் முதல்வர் பதவியிலிருந்து 9 மாதங்களுக்கு முன் பாஜக தலைமையால் தவறாக மாற்றப்பட்ட பின்னரும் இந்த எம்எல்ஏக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு நன்றி.
முதல்வர் சதானந்த கெளடாவுக்கு ஆட்சி செய்யவே தெரியவில்லை. முதல்வர் பதவியைப் பிடிக்க பாஜக எம்பி அனந்த் குமார் தொடர்ந்து எல்லா குறுக்கு வழிகளிலும் முயற்சித்து வருகிறார்.
கர்நாடகத்தில் பாஜகவை காலூன்ற வைத்தவன் நான். கட்சியை விட்டு இப்போதைக்குப் போக மாட்டேன். இன்று அருண் ஜேட்லியுடன் பேசியதையடுத்து எனது ராஜினாமா முடிவை நான் இப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளேன். நான் மக்களிடம் போகப் போகிறேன்.
225 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் ஆட்சியில் இருக்க 113 எம்எல்ஏக்கள் தேவை. இதில் சுமார் 50 பாஜக எம்எல்ஏக்கள் எதியூரப்பாவிடம் உள்ள நிலையில், மிச்சமுள்ள 63 பேர் தான் முதல்வர் கெளடாவுக்கு ஆதரவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் 25 பேர் இருவரையும் ஆதரிக்காமல் நடுநிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக