வியாழன், 19 ஏப்ரல், 2012

NLC - தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், தனது தொழிலாளர்களின் வீடுகளுக்கே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு வழங்காமல் உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள மூன்று அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 2ஆயிரத்து 490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்குகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் நெய்வேலி டவுன்ஷிப் உள்ளது. குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகர திட்ட அலுவலகம்தான் வழங்கி வருகிறது. எனினும் நெய்வேலி டவுன்ஷிப் எல்லைக்குட்பட்ட 21, 30 வட்டங்களில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு, நகர திட்ட அலுவலகம் இதுவரை மின்சாரம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் இங்கு வசிக்கும் மக்கள்.
இது குறித்து பல முறை நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்திடம் விண்ணப்பம் அளித்தும் பல வகையில் முறையிட்டும் எந்த பயனும் ஏற்படவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் இங்கு வசிப்பவர்கள். மேலும், மின்சாரம் வழங்கப்படாதது குறித்து கேள்வி கேட்கும் ஒப்பந்த தொழிலாளர்களை நிர்வாகம் அச்சுறுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, மின்சாரம் இல்லாததால் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருப்பதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள் இங்கு வசிக்கும் மாணவர்கள். விளக்கு வெளிச்சத்தில், நீண்ட நேரம் படிக்க முடிவதில்லை என்பதால், இரவு நேரங்களில் மாணவர்கள் அதிகம் படிப்பதில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர் இவர்களின் பெற்றோர்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் இதுவும் ஒன்று என்று கூறும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கங்கள், இவை குறித்து உதவி தொழிலாளர் நல ஆணையருடன் நாளை பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளன. தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாமல் போகுமானால், கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவை தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக