வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஷேல் எரிவாயு திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க அழைப்பு


சிதம்பரம்:ஷேல் எரிவாயு திட்ட எதிர்ப்புப் போராட்டத்துக்கு அனைத்து விவசாயிகளும் சங்க வித்தியாசமின்றி பங்கேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிதம்பரம் காந்திசிலை அருகே சிதம்பரம், காட்டுமன்னார்குடி தாலுகா ஒன்றுபட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் விவசாயத்துக்குத் தேவையான நீர் அதாரத்தைப் பெருக்கக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு சங்கச் செயலர் எஸ்.ரங்கநாயகி தலைமை வகித்தார். விவசாயிகள் வி.ராமாமிர்தம், என்.ராதாகிருஷ்ணன், கே.ரவிச்சந்திரன், சி.வைத்தியலிங்கம், ஆர்.முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியதாவது:
விவசாயத்தை காக்க வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும்.
சிதம்பரத்தின் மொத்தக் கழிவு நீரும் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் பிச்சாவரம் உள்ளிட்ட 25 கிராம விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே கழிவுநீர் கலப்பதை உடனே தடுக்க வழி செய்யவேண்டும்.
வரும் 18ஆம் தேதி நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் ஷேல் எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டங்களில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் அனைத்து விவசாயிகளும் சங்க வித்தியாசம் இல்லாமல் பங்கேற்று ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர் சங்க என்.ராமமூர்த்தி, கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.கண்ணன், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.விஜயகுமார், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் டி.விநாயகமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக