வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம்: "5 மாவட்டங்களை பாலைவனமாக்கும்'

கடலூர் :மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இந்த மாவட்டங்கள் பாலைவனமாகும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ.
இதுகுறித்து கடலூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ. கூறியதாவது: மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. தமிழகத்தில் 35 இடங்களில் ஆழ்துளைக் கிணறு தோண்டி ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது. பூமியில் 10 ஆயிரம் அடி முதல் 15 ஆயிரம் அடிக்கு குழாய் அமைத்து பின்னர் பக்கவாட்டில் நான்கு புறமும் 2 கி.மீ. அளவுக்கு குழாய் அமைத்து கடினப் பாறையை உருக வைத்து அதன் மூலம் ஷேல் எரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ளனர். மண், தண்ணீர், ரசாயனம் உள்ளிட்டவற்றை கலந்து அதிவேகமாக செலுத்துவதன் மூலம் இந்த குழாய் உருவாக்கப்படும்.
இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ஓ.என்.ஜி.சி.க்கு கூடுதலாக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தை ஏற்கெனவே குருடாயில் எடுக்க அனுமதி பெறப்பட்ட கடலூரில் 16 இடங்கள், நாகை 9, அரியலூர் 6, தஞ்சை 5, திருவாரூர் 1 ஆகிய 35 இடங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் ஓமாம்புலியூர், மெய்யாத்தூர், பூர்த்தங்குடி, கலிகடந்தான், நந்தீஸ்வரம்மங்களம், பாளையங்கோட்டை கீழ்பாதி, பேரூர் ஆகிய 7 இடங்களிலும், சிதம்பரம் வட்டத்தில் கிளாவடிநத்தம், எறும்பூர், ஆதிவராகநல்லூர், சுத்துக்குளி, கே.அகரம், கிளியனூர் ஆகிய 6 இடங்களிலும், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பாச்சாரப்பாளையத்திலும் ஷேல்கிஎரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
மீண்டும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முயன்றால் ஆழ்துளைக் குழாய் அமைக்கும் இடத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக