புதன், 12 ஆகஸ்ட், 2015

என்.எல்.சி. 25 நாட்களாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம்: ஒப்பந்த தொழிலாளர்களும் ஆதரவு

நெய்வேலி:என்.எல்.சி.யில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
என்.எல்.சி.யில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் நிரந்தர ஊழியர்கள் மட்டும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் 12 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்களிலும் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் வேலைக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தை முன்னின்று நடத்தி வந்த தொ.மு.ச. தொழிற்சங்க தலைவர் திருமாவளவன் நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
2013–ம் ஆண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் 52 நாள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்துக்கு காரணமாக இருந்ததாக கூறி திருமாவளவன் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று இரவு ஒப்பந்த தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அதில் திருமாவளவன் நீக்கத்தை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.
அதன்படி ஒட்டுமொத்த ஒப்பந்த தொழிலாளர்களும் நேற்று இரவு 10 மணி முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
ஏற்கனவே நிரந்தர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களும் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் என்.எல்.சி. நிறுவன பணிகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிரந்தர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து தான் மற்ற பணிகளை செய்து வந்தனர். மின் உற்பத்தி பணி மற்றும் நிலக்கரி வெட்டும் பணி ஆகியவற்றை அவர்கள் செய்து வந்தனர். இப்போது அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் இந்த பணிகள் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் காரணமாக ஏற்கனவே மின் உற்பத்தி ஓரளவு பாதிக்கப்பட்டு வந்தது. இப்போது ஒட்டுமொத்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் மிக விரைவிலேயே மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் உற்பத்திக்காக ஏற்கனவே இருப்பில் வைத்திருந்த நிலக்கரி பெருமளவு தீர்ந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு தேவையான நிலக்கரியே இருப்பில் உள்ளது. நிலக்கரி வெட்டும் பணி நிற்கும் நிலை ஏற்பட்டிருப்பதால் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இனி கிடைக்காது. எனவே மின் உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சி அடையும்.
என்.எல்.சி.யில் 4 மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 2990 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். வேலை நிறுத்தம் காரணமாக மின் உற்பத்தி சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய நிலவரப்படி 2068 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது 922 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
என்.எல்.சி.யில் உற்பத்தியாகும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 40 சதவீதம் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி 1196 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். தற்போது உற்பத்தி குறைந்திருப்பதால் அதை விட குறைவான மின்சாரமே அனுப்பப்படுகிறது.
மேலும் மின் உற்பத்தி குறைந்தால் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் மின்சாரம் வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக