வியாழன், 22 ஜனவரி, 2015

விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை அதிகம்:மக்களை சுரண்டும் மத்திய அரசு

டெல்லி :வாகனங்களுக்கு நாம் பயன்படுத்தும் பெட்ரோலின் விலையை விட விமானத்திற்குப் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் விலை இப்போது குறைவாக உள்ளது.

ஒருவேளை முதன் முதலாக சாதாரண பெட்ரோல் விலை விமான எரிபொருளை விட விலை அதிகமாகி இருக்கலாம்.

பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.58.91. ஆனால் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் என்று அழைக்கப்படும் விமான பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.52.42 என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண பெட்ரோல், விமான எரிபொருளை விட தரத்தில் சற்று குறைவானதே. ஆனால் இதன் விலை தூய்மையான விமான பெட்ரோலை விட அதிகமாக இருப்பதற்குக் காரணம் மத்திய அரசு தொடர்ச்சியாக 4 முறை பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தியதுதான்.

4 முறை உற்பத்தி வரி அதிகரிப்பினால் லிட்டருக்கு மொத்தம் ரூ.7.75 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.16.95 என்று பெட்ரோலுக்கு அதிகபட்ச உற்பத்தி வரி நிலவுகிறது.

பெட்ரோலிய அமைச்சகத் தரவுகளின் படி, 2002 ஏப்ரலில் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.10.53 ஆக இருந்தது. அப்போதுதான் பெட்ரோல் விலை நிர்ணயத்தின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. பிறகு 2005 மே மாதம் உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.14.59-ஆக அதிகரித்தது.

2008 மார்ச்சில் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி அதன் உச்சபட்சமான ரூ.14,78க்கு அதிகரிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு இது 9.48-ஆகக் குறைக்கப்பட்டது.

2010 ஜூன் மாதத்திற்குப் பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலை மாற்றமடைந்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு கண்டது.

இதனையடுத்து பெட்ரோல் விலை 9 முறை குறைக்கப்பட்டதில் மொத்தமாக லிட்டருக்கு ரூ.14.69 விலை குறைவு ஏற்பட்டது. ஆனால் விலைக்குறைப்பு இன்னும் கூட இருந்திருக்க வேண்டும், அப்படியாகாததற்குக் காரணம் மத்திய அரசு உற்பத்தி வரியை ரூ. 1.50 பிறகு ரூ.2.25 அதன் பிறகு ரு.2 மற்றும் பிறகு ரூ.2 என்று அதிகரித்தபடியே வந்தது. நிதிநிலை பற்றாக்குறையை குறைக்க உற்பத்தி வரியை அதிகரித்தது.

இதன் மூலம் ரூ.94,164 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது என்று பெட்ரோலிய அமைச்சகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டிலும் உற்பத்தி வரி அதிகரிப்பினால் அரசுக்கு ரூ.18,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் .

கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு  பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய போதெல்லாம் எதிர்ப்பு காட்டிய  பாஜக  நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக  அரசு மத்தியில் ஆட்சியை அமைத்து 7 மாதங்கள் ஆகிய நிலையிலும் விலைவாசி உயர்வில் மாற்றம் இல்லை என்பதே யதார்த்தம்
இந்தியாவில் பெரும்பகுதி டீசல் விநியோகம் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் என்கிற மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கச்சா எண்ணையை சுத்திகரித்து பயன்பாட்டிற்கான பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றும் பணி என்பது 80 சதவீதம்  ரிலையன்ஸ் குழுமத்திடம் தான் உள்ளது.இவற்றின் மூலம் தான் டூவீலர் முதல் விமானம் வரை ஏழை எளிய நடுத்தர கோடீஸ்வர மக்களின் பயணம் நடக்கிறது. உணவுப் பொருட்கள் முதல் ஆடை அணிகலன்கள் மருந்துப் பொருட்கள் என்று அனைத்து அத்தியாவசிய பொருட்களின் பரவலாக்கமும் நடைபெறுகிறது.அதனால் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் உடனடியாக மக்களை பாதிக்கிறது.
நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வே காரணம்
அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் காய்கறி, பழ வகைகளும், பேருந்து ரயில் உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்களும் 7 மாதங்களுக்கு முன்பிருந்த  அதே விலையிலும் பலநேரங்களில் கூடுதல் விலையிலும் இருக்கின்றன. இதுதான் புரியாத புதிராகவும் விலகாத மர்மமாகவும் இருக்கிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக