புதன், 12 நவம்பர், 2014

அவசியமாகும் ஆதார்: பாஸ்போர்ட் காலதாமதம் தவிர்க்க ஆதாரை கட்டாயமாக்க முடிவு!

புதுடெல்லி:இந்திய மக்கள் அனைவருக்கும், ஆளுக்கொரு தனி அடையாள எண் கொடுக்கலாம் என்ற திட்டக்குழுவின் பரிந்துரையை, மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்க ஆட்சி முடிவெடுத்தது. 2009–ம் அண்டு ஜூலை 2–ந்தேதி இதற்கான ஆணையத்தின் தலைவராக மத்திய கேபினட் மந்திரி அந்தஸ்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி நீண்ட அனுபவம் பெற்ற நந்தன் நிலேகனி
நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் இந்த ஆணையத்தின் பணி முழுவீச்சில் தொடங்கியது. அனைத்து மக்களுக்கும் தனித்துவமான 12 இலக்கம் கொண்ட அடையாள எண் வழங்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டுவிட்டது, அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது, வருமானவரி கட்டுபவர்களுக்கு பான் அடையாள அட்டை வழங்கப்படுகிறது, தபால் இலாகாவில் முகவரி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், அவரவர் பணிபுரியும் இடங்களிலும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இப்படி பல அடையாள அட்டைகள் இருக்கும்போது, இன்னுமொரு அடையாள அட்டை தேவையா?, இதற்கு இவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய் செலவு தேவையா? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்த அடையாள அட்டைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக, ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், ஆதார் அடையாள அட்டை என்பது, இந்தியா முழுமைக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அதாவது, குழந்தை முதல் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஒருவர் பாக்கியில்லாமல் வழங்கப்படுவதாகும். மேலும், இந்த ஆதார் அடையாள அட்டை ஒவ்வொருவரின் விரல் ரேகை, கருவிழி போன்ற அடையாளங்களைக் கொண்ட பயோமெட்ரிக் கார்டுகளாக வழங்கப்படுவதால், இதில் போலி அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கான வாய்ப்பே இல்லை. இதனால்தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த ஆதார் அட்டை வழங்கும் பணிக்கு ஆதரவு தெரிவிக்காத பா.ஜ.க., ஆட்சி பொறுப்பை ஏற்றபிறகு இதற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது.
இதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு ரூ.2.6 லட்சம் கோடிக்குமேல் வழங்கப்படும் பல மானியங்கள், மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் போன்ற பணிகளுக்கு ஊதியம் வழங்குதல் போன்ற பணிகளில் ஏராளமான முறைகேடுகள், தகுதியில்லாதவர்களுக்கு வழங்குதல் போன்று பல தவறுகள் நடப்பதாக புகார்கள் இருப்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. பயனாளிகளின் ஆதார் எண்ணைக் கொண்ட வங்கி கணக்குகளில் இந்த மானியங்களை அரசாங்கம் நேரடியாக போட்டால் எந்த தவறுக்கும் நிச்சயமாக இடம் இருக்காது. முதல்கட்டமாக நல்ல முயற்சியாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு அரசு வழங்கும் மானியத்தை இவ்வாறு வங்கிக்கணக்குகளில் சேர்க்க அரசு முடிவு எடுத்துள்ளது.
இப்போது திடீரென ஆதார் எண்ணைப் பெற்றுவிட்டே, புதிய செல்போன் இணைப்புகள் வழங்கவேண்டும் என்று மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. பெரும்பாலும், செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையில், தற்போது 95.18 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. முதலில் புதிய இணைப்புகளின் அடிப்படையில் வழங்கிவிட்டு, பிறகு ஏற்கனவே செல்போன் வைத்திருப்பவர்களிடம் ஆதார் எண்ணை பெற்றால் எந்தவிதமான தவறான பயன்பாட்டுக்கும் இடமே இருக்கமுடியாது. ஆனால், நாட்டில் ஆதார் அடையாள அட்டை இன்னும் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில்கூட 74 சதவீதம் பேர்களுக்கு மட்டுமே ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு நடந்துமுடிந்துள்ளது. இப்போது 100 சதவீதம் அனைவருக்கும் வழங்கும்பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. எதிர்காலத்தில் ஆதார் எண் அடிப்படையில்தான் அனைத்து அரசு திட்டங்களின் பலன்களையும் பெறமுடியும். எனவே, மீதமுள்ள 26 சதவீத மக்களும் ஆதார் எண்ணை பெறுவதற்காக ஆங்காங்கு நடத்தப்படும் முகாம்களுக்கு சென்று இதைப்பெற்று கொள்ளவேண்டும். ஒருசில நிமிடங்களில் முடிந்துவிடும் இந்த வேலையை முடிப்பது அவர்களுக்குத்தான் பயன். இந்த பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இன்னும் விரிவாகவும், விரைவாகவும் மேற்கொண்டு, தமிழ்நாட்டில் 100 சதவீதம் ஆதார் எண் வழங்கும் பணி முடிந்துவிட்டது என்ற பெருமையை பெற்றுத்தரவேண்டும்.

மேலும்  பாஸ்போர்ட் வழங்குவதில் போலீசார் விசாரணை காரணமாக ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.பாஸ்போர்ட் வாங்க விரும்புவோர் விண்ணப்பித்த பிறகு அவர் மீது குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கிய பிறகே பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை காணப்பட்டு வருகிறது. தற்போது இந்த முறையை மாற்றி பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த புதிய நடைமுறையில் ஆதார் அட்டை மூலமாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள தகவல்களை ஒப்பிட்டு பார்த்து விண்ணப்பதாரரின் குற்ற வழக்குகளின் தன்மைகளை கண்டறிந்து விட முடியும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று வெளியுறவுத்துறை, உள்துறை, சட்டத்துறை, புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஸ்போர்ட் வழங்குவதில் விரைவான நடைமுறைக்கு தேவையான ஆதார் உள்ளிட்ட பரிந்துரைகளை பிரதமர் மோடிக்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆதார் அட்டை இல்லாதவர்களின் ஆதார் எண்ணை வைத்து மட்டுமே இதனை ஏற்றுக் கொள்வது என்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டது.
பாஸ்போர்ட்டுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில், செப்டம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவு ஒன்றில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் உதவியின் மூலமாக விண்ணப்பதாரரின் குற்ற தன்மைகள் குறித்து உறுதி செய்வது இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக