வெள்ளி, 24 அக்டோபர், 2014

ஸ்மார்ட் ரேஷன் கார்டு இப்போது இல்லை ரேஷன் கார்டுகளில் மீண்டும் "உள்தாள்"!

சென்னை: தமிழ்நாட்டில் மின்னணு ரேஷன் கார்டு பணி தாமதம் ஆவதால் புதிய ரேஷன் கார்டு 2015 ஆம் ஆண்டும் வழங்கப்பட மாட்டாது என்றும், வழக்கம்போல் உள்தாள் ஒட்டிக்கொள்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.கடைசியாக, தமிழகத்தில் 2005 இல் பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய கார்டு வழங்கப்பட்டது.

புதிய ரேஷன் கார்டு:
 
அந்த கார்டு 2005 முதல் 2009 வரை பயன்படுத்த முடியும் என அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 2010 இல் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
 
உள்தாளுடன் ரேஷன் கார்டு:
 
ஆனால் புது கார்டு வழங்காமல் 2010 முதல் 2013வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் பழைய ரேஷன் கார்டுகளிலேயே "உள்தாள்" ஒட்டப்பட்டு ரேஷன் கடைகளில் பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர்.
 
கிழிந்து போன கார்டு:
 
ஒரே ரேஷன் கார்டை 10 ஆண்டுகள் உபயோகித்து விட்டதால், ரேஷன் கார்டு கிழிந்து பழைய பேப்பராக காட்சி அளிக்கிறது.
 
மின்னணு ரேஷன் கார்டு:
 
2012 இறுதிக்குள் மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று 2 ஆண்டுகளுக்கு முன் அதாவது, 2012 டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது.
 
பொதுமக்கள் எதிர்பார்ப்பு:
 
ஆனால் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டு ஆகியும் மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 2015 ஆம் ஆண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுமா அல்லது மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்படுமா அல்லது வழக்கம்போல் உள்தாள் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
 
ஆதார் அடையாள அட்டை குழப்படி:
 
ஆதார் கார்டு அடையாள அட்டை திட்டத்தில் மத்திய அரசு செய்த குளறுபடியால், இதுவரை தமிழகத்தில் 75 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
 
மீண்டும் நடைமுறை:
 
அதனால் 2015 ஆம் ஆண்டு மின்னணு கார்டு வழங்க முடியாது. அதனால் வரும் 2015 ஆம் ஆண்டுக்கும் ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக