செவ்வாய், 30 செப்டம்பர், 2014

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்ட ஊக்குவிப்பு முகாம் கலெக்டர் சுரேஷ்குமார் தகவல்


கடலூர் :படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்ட ஊக்குவிப்பு முகாம் 13 ஒன்றியங்களில் வருகிற 7–ந் தேதி முதல் தொடங்கி நடக்க இருப்பதாக கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


 கடலூர் மாவட்டத்தில் தொழில் வணிக துறை மூலம் இயங்கும் மாவட்ட தொழில் மையம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க தேவையான நீல வரைபட அனுமதி, தொழில் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு ஒப்புகை சான்றிதழ், தொகுதி–1, தொகுதி–2 மற்றும் தமிழக அரசின் பல்வேறு மானிய திட்டங்களில் முதலீட்டு மானியம், மின் மானியம், மின்னாக்கி மானியம் மற்றும் பெண்கள், தாழ்த்தப்பட்ட இனம், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகிய பிரிவினருக்கு சிறப்பு மானியம் வழங்கி வருகிறது.

மேலும் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டத்தின் மூலம் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ.5 லட்சம், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சம், வியாபார தொழிலுக்கு ரூ.1 லட்சம் 15 சதவீத மானியத்துடன் வங்கி மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


18 வயது முதல் 35 வயது முடிந்தோர், தாழ்த்தப்பட்ட இனம், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர்,சிறுபான்மையினர், பெண்கள் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு 45 வயது முடிந்தோர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்துக்குள் மிகாமல் இருப்போர் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

கல்வித்தகுதி 8–ம் வகுப்பு தேர்ச்சி, கடலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 வருடம் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற சிறப்பு ஊக்குவிப்பு முகாம்களை மாவட்ட தொழில் மையம் 13 ஒன்றியங்களில் நடத்துகிறது.


 அதன்படி நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் வருகிற 7–ந் தேதியும், கம்மாபுரம், விருத்தாசலம் ஒன்றியங்களில் 9–ந் தேதியும், கீரப்பாளையம், புவனகிரி ஒன்றியங்களில் 10–ந் தேதியும், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஒன்றியங்களில் 14–ந் தேதியும், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களில் 16–ந் தேதியும், பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றியங்களில் 17–ந் தேதியும், கடலூர் ஒன்றியத்தில் வருகிற 30–ந் தேதியும் ஊக்குவிப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களில் படித்த வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டத்தில் தொழில் தொடங்க தேவையான ஆலோசனைகளை பொது மேலாளர், முன்னோடி வங்கி மேலாளர், அரசு துறை அலுவலர்கள் மற்றும் வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் தொழில் அதிபர்கள் வழங்க உள்ளனர்.

இந்த வாய்ப்பை நமது மாவட்டத்தில் உள்ள படித்த வேலை தேடும் இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, புதிய தொழில்களை தொடங்கி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
     
கருத்துகள்
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக