வியாழன், 24 ஜூலை, 2014

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் : பொதுமக்கள் அவதி

கடலூர் :கடலூர் முதுநகர் அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் மூடப்பட்ட தனியார் தொழிற்சாலையில் இருந்து நேற்று மாலையில் நெடியுடன் கூடிய துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏதாவது விபரீதம் ஆகிவிடுமோ என்று அச்சம் அடைந்த கிராம மக்கள் சுமார் 100 பேர் இரவு நேரம் கடலூர்–சிதம்பரம் சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நட்த்தினர். அதில் அந்த தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தும் முயற்சியை கைவிட்டனர்.
பின்னர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர் அதிகாரிகள் மூடப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது தொழிற்சாலையில் இருந்து ஒரு குழாயில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதை கண்டுபிடித்து அவற்றை அடைத்து சரிசெய்தனர். இதன் பின்னர் துர்நாற்றம் வீசியது தடுக்கப்பட்டது. மூடப்பட்ட தனியார் தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசிய சம்பவத்தால் ஈச்சங்காடு கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக