சனி, 3 மே, 2014

பரங்கிப்பேட்டையில் ஒரே நாளில் 20 டன் மத்தி மீன்கள் பிடிபட்டன 200 கிலோ எடைகொண்ட திருக்கை மீனும் சிக்கியது

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில்  சிறிய படகு மீனவர்கள் வலையில் ஒரே நாளில் 20 டன் மத்தி மீன்கள் பிடிபட்டன.
 
பரங்கிப்பேட்டை பகுதியில் அன்னங்கோவில், முடசல்ஓடை, எம்.ஜி.ஆர்.திட்டு, முழுக்குதுறை, திண்ணூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேலங்கிராயன்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரபேட்டை உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஏப்ரல் 15–ந் தேதி முதல் மே மாதம் 29–ந் தேதி வரை (45 நாட்கள்) மீன்களின் இனப்பெருக்கம் காலம் என்பதால் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
எனவே அன்னங்கோவில் பகுதி மீனவர்கள் சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று 100–க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களது வலைகளில் அதிக அளவு மத்தி மீன்களே கிடைத்தது.
200 கிலோ எடை திருக்கை மீன்
பிடிபட்ட மீண்கள் அனைத்தும் அன்னங்கோவில் மீன் ஏலம் விடப்படும்தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆயிரம் கிலோ மத்தி மீன் ரூ.25 முதல் ரூ.30 ஆயிரம் வரை ஏலம் விட்டு விற்பனை செய்யப்பட்டது. இதை கேரளாவை சேர்ந்த மீன் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
இந்த மீன்கள் அனைத்தையும் லாரிகளில் ஏற்றி, கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று ஒரே நாள் மட்டும் மீனவர்கள் வலையில் 20 டன் மத்தி மீன்கள் சிக்கியது. இதேபோல் மீனவர் ஒருவரது வலையில் 200கிலோ கொண்ட திருக்கை மீனும் சிக்கியது. இந்த மீனை ஏராளமானவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக