திங்கள், 31 மார்ச், 2014

அகரம் ரயில்வே கேட்டில் விபத்து அபாயம் ! ... : வாகனங்கள் நுழைவதை தடுக்க வேண்டும்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அகரம் ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் கடந்து செல்வதை தவிர்க்க கேட்டில் சங்கிலி அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதையில், பிரதான சாலைகள் குறுக்கிடும் பகுதியில் ரயில் வரும் நேரங்களில் சாலை போக்குவரத்தை தடை செய்யும் வகையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் வரும் நேரங்களில் கேட் மூடப்படுவதால் விபத்துகள் நடக்காமல் தடுக்கப்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கிராமத்தில் ரயில் பாதையை சிதம்பரம் செல்லும் சாலை கடந்து செல்கிறது. இதனால், அப்பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் வரும் நேரத்திற்கு முன்பாகவே அகரம் ரயில்வே கேட் மூடப்பட்டுவிடும்.

இதனால் பரங்கிப்பேட்டை, பு.முட்லூர் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள், கார், வேன், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கேட் முன்பு நின்றுவிடும்.

ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்று, பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகே கேட் திறக்கப்படும். தற்போது பரங்கிப்பேட்டை அகரம் ரயில்வே கேட்டின் கீழ் பகுதியில் சங்கிலிகள் இல்லாததால், கேட் மூடப்பட்டிருக்கும் நேரங்களில், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், ரயில்வே கேட்டின் கீழ் பகுதியில் வாகனங்களை வளைத்து, நெளித்து ரயில் பாதையை கடந்து செல்கின்றனர். இதுப்போன்ற நேரங்களில் அதிவேகமாக வரும் ரயிலில் சிக்கிக்கொண்டால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உயிரிழப்பை தவிர்க்க, ரயில்வே கேட்டின் கீழ் பகுதியில் வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு சங்கிலிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக