சனி, 15 மார்ச், 2014

மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு துணை ராணுவம் வருகை

கடலூர், : கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிர்லோஷ்குமார் நேற்று கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் டாக்டர் ஷர்மிளா, நகராட்சி ஆணையர் காளிமுத்து, துணை தாசில்தார் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது ஆட்சியர் கிர்லோஷ்குமார் கூறியதாவது:
தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் இதுவரை 29 புகார்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி, பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்தது தொடர்பாக 153 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புவனகிரியில் இது தொடர்பாக ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. சாலைகள், முக்கிய இடங்களில் பேனர்கள், தட்டிகள் வைத்தது தொடர்பாக 13 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது
சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ள அரசியல் கட்சியினர் இன்னும் இரு தினங்களுக்குள் அவற்றை அழித்துவிட வேண்டும். இல்லை என்றால் அந்த விளம்பரங்கள் வெள்ளை பூசி அழிக்கப்படும். அந்த செலவு சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். மேலும் வழக்கு பதிவு செய்யப்படும்.
கடலூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள 67 சேலைகளும் 70  வேட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு மற்றும் தணிக்கை பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்திற்குள் துணை ராணுவப்படை கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வர உள்ளது. சோதனை சாவடிகள் மற்றும் பதற்றமான பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கான வசதிகள், மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கள் ஆகிய அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. இவை தொடர்பான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன, என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக