பரங்கிப்பேட்டை அருகே முடசல் ஓடையில் 7.78 கோடி ரூபாய் மதிப்பில் மீன் இறங்குதளம் விரிவுபடுத்தும் பணி துவங்கி
கடந்த ஒரு வாரமாக ஜரூராக பணி நடந்து வருகிறது. இதனால் 12 கிராம மீனவர்களின்
வாழ்வாதாரம் அதிகரிப்பதுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்பதால்
மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பரங்கிப்பேட்டையை அடுத்த முடசல் ஓடை கிராம கடற்கரையோரம் மீன் இறங்குதளம் உள்ளது. முடசல் ஓடை, சூர்யாநகர், பில்லுமேடு, கூழையார், எம்.ஜி.ஆர்., திட்டு,
முழுக்குத்துறை உட்பட 12 கிராம மீனவர்கள் கடலில் பிடிக்கப்படும் மீன் வகைளை விசைப்படகு மற்றும் லம்பாடி
இன்ஜின் பொருத்திய படகுகளில் முடசல் ஓடை மீன் இறங்குதளத்திற்குக் கொண்டு
வருகின்றனர். அங்கிருந்து மீன் வகைகள் மற்றும் இறால்களை படகில் இருந்து இறக்கி
சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பதப்படுத்தப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் வெளி
மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது 12 மீனவ கிராமங்களில் 100
விசைப்படகுகள், 1000க்கும் மேற்பட்ட லம்பாடி இன்ஜின் பொருத்திய படகுகள் உள்ளதால்
அனைத்து படகுகளும் முடசல் ஓடை மீன் இறங்கு தளத்தில் பாதுகாப்பு நிறுத்தி வைக்க
முடியவில்லை. இடப்பற்றாக்குறை காரணமாக பாதிக்கும் மேற்பட்ட படகுகள் அந்தக்
கிராமங்களிலும் வெள்ளாற்றிலேயும் நிறுத்தி வைத்துவிடுகின்றனர். மேலும் வலை பின்னும்
கூடம் இல்லாததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இதுகுறித்து முடசல் ஓடை கிராம
மீனவர்கள் மீன் இறங்குதளத்தை விரிவுப்படுத்தி தரக்கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை
வைத்திருந்தனர். அதன்பேரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முடசல் ஓடை மீன்
இறங்குதளத்தை விரிவுப்படுத்தவும், புதியதாக வலைபின்னும் கூடம், அலுவலகம் உட்பட
புதிய கட்டடங்கள் கட்ட தமிழக அரசு 7 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கியது .அதையொட்டி முடசல் ஓடை கிராம கடற்கரையோரம் கடந்த ஒரு வாரமாக மீன்
இறங்குதளம் விரிவுப்படுத்தும் பணிக்காக வெள்ளாற்றில் மண் தோண்டும் இயந்திரம்
(டிரஜ்ஜர்) மூலம் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து தோண்டப்படும்
மண்மேடுகள் கரைக்குக்குக் கொண்டு வரப்பட்டு மீன் இறங்குதளம் அமைக்கும் பணி நடந்தது
வருகிறது.மீன் இறங்குதளம் விரிவுப்படுத்தும் பணி முடிவு பெறும் பட்சத்தில் முடசல்
ஓடை கிராமத்தைச் சுற்றியுள்ள 12 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம்
அதிகரிப்பதுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.எனவே மீன் இறங்கு தளம்
விரிவுப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மீனவர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.










0 கருத்துகள்:
கருத்துரையிடுக