சிதம்பரம்:விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. சிதம்பரம் பாராளுமன்றம் தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று காலை சிதம்பரம் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவதுதமிழக மீனவர்கள் சிங்களர்களால் சிறை பிடிப்பது தொடர் கதையாகி விடுகிறது. இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்து இதற்கு நிலையான முற்று புள்ளி வைக்க வேண்டும்.
அப்படி இல்லையெனில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து ஒரு உறுதியான நிலைபாட்டை எடுக்க வேண்டிய பொறுப்பும், தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு இதற்கு நிரந்தர தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
ஈழதமிழர்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி அங்கு மருத்துவமனை, கல்வி நிலையங்கள், வீடுகள் போன்ற மேம்பாட்டு பணிகளுக்கு தமிழக அரசு உட்படுத்த வேண்டும். இலங்கையில் அடுத்த மாதம் (நவம்பர்) நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமரோ, அவரின் சார்பில் உறுப்பினர்களோ பங்கேற்க கூடாது என வலியுறுத்தி பிரதமரை நேரில் சந்த்தித்து மனு அளிக்க உள்ளோம்.
அதனையும் மீறி இந்திய அரசு கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும். தமிழகம் முழுவதும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சாதி வெறியர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் கூர்ந்து கவனித்து கவனத்துடன் செயல்பட்டு அதனை தடுக்க வேண்டும்.
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பிறகு இந்தியா முழுவதும் மதவாத செயல்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் மதவாதத்துக்கு எதிரான இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் சேர்ந்து மதசார்பற்ற கூட்டணி அமைத்து மதவாதத்துக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.
ஏற்காடு இடைத் தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்க விடுதலை சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது. இதையடுத்து டிசம்பர் 1–ந் தேதி வாழப்பாடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது என்றும் 2 நாட்கள் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஏற்காடு தொகுதியில் சுற்று பயணம் செய்து பிரசாரம் செய்ய உள்ளேன்.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடந்த முறை நான் போட்டியிட்டபோது சாதி மோதல்கள் ஏற்படும் என எதிரிகள் பிரசாரம் செய்தனர். ஆனால் கடந்த 4½ ஆண்டுகளில் எந்தவித சாதிய மோதல்களும் இல்லாமல் தலித் மற்றும் தலித் அல்லாதவர்களிடையே ஒரு இணக்கமான சூழ்நிலைதான் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகளில் நிலவி வருகிறது.
மேலும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அமைதி பூங்காவாக உள்ளது என்பதை இது எடுத்து காட்டுகிறது. வருகிற 24–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை விடுதலை சிறத்தை கட்சி சார்பில் மண்ணுரிமை கோரிக்கையை வலியுறுத்தி மண்ணுரிமை வாரம் தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இதில் பிரதான கோரிக்கைகளாக வீடு, மனை இல்லாத தலித்களுக்கு 5 சென்ட் நிலம், நிலமில்லாத தலித்களுக்கு 5 ஏக்கர் நிலம், தமிழகம் முழுவதும் உள்ள 12½ லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க நீதியரசர் மருதமுத்து ஆணையத்தை செயல்படுத்தவும் அரசு மற்றும் கோவில் நிலங்களை குத்தகை விடும்போது தலித்களுக்கு முன்னுரிமை அளித்து மண்ணுரிமை வாரம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக