சனி, 26 அக்டோபர், 2013

கடலூர் துறைமுகம் பகுதியில் வெளிமாநிலத்தினர் வந்த படகு பறிமுதல்

கடலூர் முதுநகர்:கடலூர் மீன்பிடி துறைமுகம் பகுதியில் வெளிமாநிலத்தினர் வந்த படகை துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 கடலூர் மீன்பிடிதுறைமுகத்தில், வியாழக்கிழமை மாலை மீன்பிடி விசைப்படகில் கம்ப்யூட்டர் மற்றும் கடல் பகுதியை அளவிடும் கருவிகள் உள்ளிட்ட பொருள்களை சிலர் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.  இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள் கடலூர் துறைமுகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் மற்றும் துறைமுக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், அவர்கள் பரங்கிப்பேட்டையில் அமையவுள்ள தனியார் மின் உற்பத்தி திட்டத்துக்காக, பரங்கிப்பேட்டை அருகே தனியார் துறைமுகம் அமைப்பதற்கு முதற்கட்ட அளவீடு செய்வதற்காக வந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த தனியார் நிறுவன திட்ட மேலாளர் ஆனந்த் (50) என்பவர் தலைமையில் வந்ததும் தெரியவந்தது.
 பொதுவாக கடல் பகுதியில் அளவீடு செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு இவர்கள் கடலூர் துறைமுக அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் அளவீடு செய்ய முயற்சி செய்ததால் 4 பேரையும் கடலூர் துறைமுக அதிகாரிகள் தடுத்து திருப்பி அனுப்பினர்.
அவர்கள் வந்த படகு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விஜயநாதன் என்பவருக்குச் சொந்தமானது, அந்தப் படகின் உரிமம் காலாவதியாகி விட்டதால், படகை துறைமுக அதிகாரிகள் கைப்பற்றினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக