தோஹா: சிரியா, ஈரான் விவகாரங்களில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் நிலைப்பாடு சவூதி அரேபியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய பிரதிநிதிகளுக்காக சவூதி அரேபியா ஏற்பாடு செய்த கூட்டத்தில் அமெரிக்காவுடனான உறவில் சில வரம்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சவூதி அரேபியாவின் உளவுத்துறை தலைவர் பந்தர் இப்னு சுல்தான் குறிப்பிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிரியா பிரச்னையை தீர்ப்பதிலும், ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுப்பதிலும் அமெரிக்கா தோல்வியை தழுவியிருப்பதாகவும், ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு சவூதி, பஹ்ரைன் விருப்பங்களை பரிசீலிக்காமல் எடுத்தது என்றும் சவூதி உளவுத்துறை தலைவர் கூறுகிறார். ஆனால் பந்தர் இப்னு சுல்தானின் கூற்று சவூதி மன்னருக்கு ஒப்புதலைப் பெற்றுள்ளதா என்பது குறித்து விளக்கமில்லை. சவூதி-அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டால் பெட்ரோல் மற்றும் ஆயுத உடன்படிக்கைகளை பெருமளவில் பாதிக்கும் என கருதப்படுகிறது. அதேவேளையில் சவூதியுடன் நெருக்கமான உறவு நிலவுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. பிராந்தியத்தில் அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளும் விவாதித்ததாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகிறார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவியை நிராகரித்த முடிவை சவூதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக