வெள்ளி, 6 செப்டம்பர், 2013

பரங்கிப்பேட்டை கடல் முகத்துவாரம் தூர் வாரும் பணி

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதியில் கடல் முகத்துவாரம் தூர் வாரும் பணியை சிதம்பரம் எம்எல்ஏ கே. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து அப்பகுதி மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சிதம்பரம் அருகே பரங்கிபேட்டையைச் சுற்றியுள்ள கிள்ளை, சின்னவாய்க்கால், முழக்குத்துறை, அன்னங்கோவில், சின்னுர் உள்ளிட்ட 50 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க படகில் செல்லும் வழி (கடல் முகத்துவாரம்) முடசல் ஓடை மற்றும் அன்னங்கோவில் பகுதிகளாகும். இந்த இரு பகுதிகளில் உள்ள முகத்துவாரம் அடிக்கடி மண் மேடாக தூர்ந்து போய் மீனவர்கள் படகில் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தனர்.  தற்போதும் அரசு தற்காலிகமாக முகத்துவாரத்தை தூர் வார உத்திரவிட்டதன் பேரில் தூர் வாருவதற்கான ஆயத்த பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
தகவல் அறிந்த சிதம்பரம் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் விசைப்படகில் வெள்ளாறு கடலில் கலக்கும் பகுதியான முகத்துவரத்துக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு இருந்த மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
முகத்துவாரம் தூர் வாரும் தற்காலிக பணிக்கு அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கி பணி நடைபெறுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் தற்காலிகமாக தூர்வாருவதும், பின்னர் தூர்ந்து போவதுமாகவுள்ளது.
எனவே நிரந்தரமாக தீர்வு ஏற்படும் வகையில் வடக்கு முடசல்ஓடை பகுதியில் இருந்து வெள்ளாற்றின் தெற்கு பகுதியில் இருந்து கடல் வரை ஒரு கி.மீ. தூரம் கருங்கல் கொட்டி கடல் மண் சரிவை தடுக்க வேண்டும். அன்னங்கோவில் மற்றும் முடசல்ஓடை பகுதிகள் மீன் இறங்கு தளமாகவும் செயல்படுகிறது.
எனவே அரசு நிரந்தர தீர்வுக்கான திட்டத்தை செயல்படுத்தினால் நாகை, கடலூர் மாவட்டத்தில் கடலோரமுள்ள 50-க்கும் மேற்பட்ட  கிராமத்தைச் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக