
2011ம் ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் பொருட்டு கடந்த 2012-13 கல்வி ஆண்டு முதல் பருவ (செமஸ்டர்) முறையை அறிமுகப்படுத்தியதோடு, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.முப்பருவ முறை இந்த கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முதல் பருவ புத்தகங்கள் ஜூன் மாதம் 10ம் தேதி பள்ளி திறந்ததும் இலவசமாக வழங்கப்பட்டன. இவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் 21ம் தேதி வரை முதல் பருவத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு முடிந்து 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.முதல் பருவத் தேர்வு முடிந்து அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறந்ததும், மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான பாட புத்தகங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.அதன்படி கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மூன்று லட்சத்து 72 ஆயிரத்து 549 மாணவ, மாணவிகளுக்குத் தேவையான இரண்டாம் பருவ பாட புத்தகங்கள், வழங்கப்பட உள்ளது.இதற்காக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 100 "செட்' புத்தகங்களும் (ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 449 "செட்' புத்தகங்கள் (6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை) வந்துள்ளது.தமிழ்நாடு பாடநூல் கழகங்களில் இருந்து வந்துள்ள இரண்டாம் பருவ புத்தகங்களை, பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை வரும் 12ம் தேதிக்குள் முடித்து, தேர்வு முடிந்து விடுமுறைக்கு பிறகு பள்ளி திறந்ததும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக