நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே நகைக்கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்கம்–வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
நெல்லிக்குப்பம்அருகே உள்ள நடுவீரப்பட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன்(வயது69) இவர் தனது வீட்டின் அருகே நகைக்கடை மற்றும் துணிக்கடையை நடத்தி வருகிறார். இந்த கடையை வைத்தியநாதன் அதே ஊரைச்சேர்ந்த, தண்டபாணி மற்றும் கடலூரைச்சேர்ந்த மாறன் ஆகியோர் கூட்டாக நடத்தி வருகிறார்கள்.
வைத்தியநாதனும், தண்டபாணியும் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலையில் வைத்தியநாதனின் மனைவி பிரபாவதி முற்றம் தெளிக்க கடைக்கு வந்த போது நகைக்கடையின் முன்பக்க கிரீல் கதவு பூட்டு உடைக்க பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுபற்றி தனது கணவர் வைத்தியநாதனிடம் கூறினார். அவர் வந்து கடையை பார்த்த போது கடையில் இருந்த 45 பவுன் தங்கம், 14 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.16 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
இதுபற்றி வைத்தியநாதன் நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் கிடந்த கறுப்பு நிற போர்வையை மோப்பம் பிடித்தபடி ஓடி சி.என்.பாளையத்தில் உள்ள மலைப்பிள்ளையார் கோவில் அருகே சென்று படுத்துக்கொண்டது. அந்த இடத்தில் காலி மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே நகைக்கடையில் கொள்ளையடித்தவர்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி மலைப்பிள்ளையார் கோவில் அருகே சென்று மதுக்குடித்து விட்டு, பின்னர் நகைகளுடன் தப்பிச்சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.
கொள்ளை சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்த கொள்ளை சம்பவம் நடுவீரப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக