ஞாயிறு, 14 ஜூலை, 2013

பேச்சுவார்த்தை தோல்வி NLC- ஊழியர்கள் 12-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு

நெய்வேலி:பங்கு விற்பனையை எதிர்த்து என்.எல்.சி. ஊழியர் கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் இன்று 12-வது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக சென்னையில் நேற்று மண்டல தொழிலாளர் ஆணைய அதிகாரி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து
ஊழியர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்க போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள காமராஜர் சிலை அருகே நேற்று பந்தல் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. மேலும் உண்ணாவிரதத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலையும் போலீசார் பிரித்தெடுத்தனர். அதைத்தொடர்ந்து `கியூ' பாலம் அருகே உண்ணா விரதம் இருக்க தொழிற் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

ஆனால் உண்ணா விரதத்துக்கு தடை விதித்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ராதிகா தெரிவித்தார். ஆனாலும் தடையை மீறி உண்ணாவிரதம் இருப்போம் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதற்கிடையே இன்று காலை போலீசார் உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளித்தனர்.

அதைத் தொடர்ந்து 9 மணிக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். தொ.மு.ச. பொது செயலாளர் ராசவன்னியன் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரதத்தில் தொ.மு.ச. தலைவர் திருமால்வளவன், பொருளாளர் அண்ணாதுரை, அலுவலக செயலாளர் ஸ்ரீதரன், அண்ணா தொழிற்சங்க தலைவர் அபு, செயலாளர் உதயகுமார், பொருளாளர் தேவானந்தன், அலுவலக செயலாளர் அல்போன்ஸ், தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் மன். திருநாவுக்கரசு, பாட்டாளி தொழிற்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் திலகர், பி.எம்.எஸ். தொழிற் சங்க தலைவர் ராஜகோ பால், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஜெரால்டு, பிற்படுத்தப்பட்டோர் நலசங்க தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இவர்களில் யார், யார்? சாகும்வரை உண்ணா விரதத்தில் பங்கேற்பது என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஏற்கனவே நோய்வாய்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் தவிர மற்றவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பார்கள். உண்ணாவிரதத்தையொட்டி அந்த பகுதியில் 1000-த்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வேலைநிறுத்தம் 12-வது நாளாக நீடித்து வருவதால் அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. எனவே எந்த நேரத்திலும் மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக